Published : 07 Apr 2024 06:12 AM
Last Updated : 07 Apr 2024 06:12 AM
மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. மும்பை அணியில் காயத்தில் இருந்து மீண்டுஉடற்தகுதி பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து புள்ளிக் கணக்கை தொடங்காமல் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கணுக்கால் காயம் மற்றும் குடலிறக்க அறுவை சிகிச்சையில் இருந்துகுணமடைந்து முழு உடற்தகுதியுடன் இன்றைய ஆட்டத்தில் களறமிங்குகிறார். அவரது வருகை மும்பை அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.
டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான ரன் குவிக்கும் திறன் வெளிப்படவில்லை. நடுவரிசையில் திலக் வர்மா, நமன் திர் ஆகியோர் சில ஆட்டங்களில் அதிரடியாக விளையாடினாலும் அது வெற்றிக்குபோதுமானதாக அமையவில்லை. ஹர்திக் பாண்டியாவும் தனது ஆல்ரவுண்ட் திறனால் அணியின் முன்னேற்றத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கவில்லை.
வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் டிம் டேவிட், டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் மட்டையை சுழற்றினாலும் அதுவெற்றியை தேடித்தரக்கூடியதாக இல்லை. இதேபோல் பந்து வீச்சில் ஜெரால்டு கோட்ஸி, குவேனா மபகா ஆகியோர் அதிக ரன்களை தாரை வார்ப்பவர்களாக திகழ்கின்றனர். எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்கள் கைப்பற்றியது புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா பவர்பிளேவில் 3 ஓவர்கள் வீசியிருந்தார். எனினும் இலக்கு 126 ரன்கள் மட்டுமே என்பதால் பும்ராவால் பெரிய அளவில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமல் போனது. இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும்.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த நிலையில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.அந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் படுமோசமாக செயல்பட்டு கொல்கத்தா அணியை 272 ரன்கள் குவிக்க அனுமதித்தனர்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணியின் பந்துவீச்சில் மாற்றங்கள் இருக்கக்கூடும். பேட்டிங்கை பொறுத்தவரையில் ரிஷப் பந்த் மட்டுமேசீராக ரன்கள் சேர்த்து வருகிறார். 2 அரை சதங்களுடன் 152 ரன்கள் சேர்த்துள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒருசிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ரிஷப் பந்த்தை தவிர்த்து டேவிட் வார்னர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் ரன்கள் சேர்க்கக்கூடியவர்களா திகழ்கின்றனர். பிரித்வி ஷா கடந்த ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தார்.
ஆல்ரவுண்டரான மிட்செல்மார்ஷ் 4 ஆட்டங்களிலும் சேர்த்து வெறும் 61 ரன்களேஎடுத்துள்ளார். மற்றொரு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் 43 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அநேகமாக இன்றையஆட்டத்தில் மிட்செல் மார்ஷ்நீக்கப்படக்கூடும். வேகப்பந்து வீச்சில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அன்ரிச் நோர்க்கியாவிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்காத முகேஷ் குமார் இன்று களமிறங்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT