Published : 06 Apr 2024 11:44 PM
Last Updated : 06 Apr 2024 11:44 PM
ஜெய்ப்பூர்: இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
ஆர்சிபி அணிக்காக கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 125 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் 7,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி இந்தப் போட்டியில் படைத்தார்.
மேலும் சிறப்பாக ஆடிய கோலி, 67 பந்துகளில் சதம் பதிவு செய்தார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது 8-வது சதமாகும். 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் டூப்ளசி ஆட்டமிழந்தார். சஹல் அவரை வெளியேற்றினார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் மற்றும் சவுரவ் சவுகான் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி, 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார்.
அடுத்து 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது பாலிலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார். இன்னொரு பக்கம் ஜாஸ் பட்லர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். ரியான் பராக் நான்கு ரன்கள், துருவு ஜுரேல் இரண்டு ரன்கள், ஷிம்ரோன் ஹெய்மயர் 11 ரன்கள் என 19.1 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது.
இந்த சீசனில் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT