Published : 05 Apr 2024 11:01 AM
Last Updated : 05 Apr 2024 11:01 AM
ஹைதராபாத்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இந்த சீசன் பேசுபொருள் மட்டுமல்ல, இந்திய வேகப்பந்து வீச்சின் வரலாற்றுத் திருப்புமுனையாகவிருக்கும் மயங்க் யாதவ் மணிக்கு 156 கிமீ வேகம் வீசி பெரிய பிஸ்தா பேட்டர்களையெல்லாம் டான்ஸ் ஆட வைத்ததைப் பார்த்த பிறகாவது சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கே பேட்டர்களுக்கு எதிராக உம்ரன் மாலிக்கை அணியில் சேர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பவரை ஈடு செய்யும் மிடில் ஓவர் பந்து வீச்சு இல்லை.அதற்கு உம்ரன் மாலிக் அவசியம் தேவைப்படுவார். 2022 சீசனில் பேசப்படும் பவுலராக இருந்த உம்ரன் மாலிக் பிறகு இந்திய அணிக்கும் ஆடினார். ஆனால் 2023 சீசனில் இவர் பெரிய அளவில் ஓரங்கட்டப்பட்டார். காரணம் இவர் அதிக ரன்களை விட்டுக் கொடுக்க ஆரம்பித்ததே. 2022 சீசனில் உம்ரன் மாலிக் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யாரக்கர்களில் ஸ்டம்புகள் எகிறின.
கடந்த சீசனில் 8 போட்டிகளில் வெறும் 5 விக்கெட்டுகளையே கைப்பற்றினார். மேலும் ஓவருக்கு 10.85 ரன்கள் என்று ரன் விகிதமும் எகிறியது. சரி சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் இது தொடர்பாக பேசுகையில், "உம்ரன் மாலிக் எங்கள் திட்டங்களில் நிச்சயமாக இருக்கிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பவுலராக வீசி ஒரு ஓவரில் 15 ரன்களைக் கொடுத்தார். பயிற்சியில் அவரை கண்காணித்தோம் நன்றாகத்தான் வீசுகிறார். அவர் மீது எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது” என்றார்.
சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் பிட்ச் ஹைதராபாத், இங்கு இந்த முறை பவுலர்களுக்கு ஈவு இரக்கமின்றி போடப்படுகிறது. ஒன்று ரன் குவிப்பு பிட்ச் இல்லையெனில் பந்துகள் மெதுவாக ஸ்லோயர் கட்டர் பந்துகளுக்குச் சாதகமாக இருக்கிறது. இதில் உம்ரன் மாலிக் ஒன்றும் செய்வதற்கில்லை. ஸ்லோ பந்துகள் உம்ரன் மாலிக் வீசக்கூடியதல்ல.
ஆகவே லெந்த்தில் வீசி பந்து வேகமாக பேட்டர்களின் உடல் நோக்கியோ சீறும் யார்க்கர்களுக்கோ சூழ்நிலை சாதகமாக இருக்கும் போது மட்டுமே உம்ரன் மாலிக்கை அணியில் சேர்ப்பார்கள் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் உம்ரன் மாலிக்கிற்கு ஏற்ற பிட்ச் அமையவில்லை என்பதால் கேப்டன் எய்டன் மார்க்ரம் உம்ரன் மாலிக்கை பயன்படுத்த முடியாமல் போனது.
உம்ரன் மாலிக் போன்ற அதிவேக எக்ஸ்பிரஸ் பவுலர்களை பவர் ப்ளே முடிந்த பிறகே கொண்டு வர வேண்டும், ஏனெனில் அந்த வேகத்திற்கு டைமிங் கிடைக்காத போது கேட்ச் ஆகும் வாய்ப்பு அதிகம். பவர் ப்ளேயில் அவை ரன்களாகும். ரஷீத் கான் குஜராத்திற்குச் சென்ற பிறகே மிடில் ஓவர்க்ளை வீச ஆளில்லாமல் சன்ரைசர்ஸ் திணறுகிறது. மயங்க் மார்க்கண்டே ஓவருக்கு 11 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுப்பவராக இருக்கிறார்.
கேன் வில்லியம்ஸன் கேப்டன்சியில் உம்ரன் மாலிக்கை அபாரமாகப் பயன்படுத்தினார். மிடில் ஓவர்களில் பயன்படுத்தினார். ஒருமுறை குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த ஸ்பெல்லை மறக்க முடியாது.
எந்த ஒரு பவுலரையும் கேப்டன் எவ்வளவு திறமையுடன் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே ஜொலிக்க முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் இதற்கு உதாரணம் இயன் சாப்பல் கேப்டன்சியில் டெனிஸ் லில்லி, மைக் பிரியர்லி கேப்டன்சியில் இயன் போத்தம், கவாஸ்கர் கேப்டன்சியில் கபில்தேவ், மைக்கேல் கிளார்க் கேப்டன்சியில் மிட்செல் ஜான்சன், இம்ரான் கேப்டன்சியில் எண்ணற்ற பவுலர்கள் குறிப்பாக அப்துல் காதிர் போன்றோர் ஜொலித்தார்கள். அப்படித்தான் உம்ரன் மாலிக்கும். பாட் கமின்ஸ் இந்த ரீதியில் யோசித்தால் சன்ரைசர்ஸ் அணிக்கு உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT