Published : 11 Apr 2018 01:23 AM
Last Updated : 11 Apr 2018 01:23 AM

ரஸல் அதிரடிக்கு பதிலடி கொடுத்த சென்னை: மகா விரட்டலில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே

 

பலத்த காவிரிப் போராட்டத்துக்கு நடுவே சேப்பாக்கத்தில் மீண்டும் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவின் 203 ரன்கள் என்ற மிகப்பெரிய வெற்றி இலக்கை அபாரமாக விரட்டி 205/5 என்று வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கொல்கத்தா அணியில் முதலில் அதிரடி வீரர் சுனில் நரைன், தீபக் சாஹரை 2 மிகப்பெரிய சிக்சர்கள் அடித்து ஹர்பஜனிடம் அவுட் ஆகி வெளியேற கிறிஸ் லின் 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தை மேலேறி வந்து ஆட முயன்று பவுல்டு ஆனார். ராபின் உத்தப்பா லின் பவுல்டு ஆன அதே ஓவரிலேயே ஜடேஜாவை 2 சிக்சர்கள் வெளுத்துக் கட்டினார், அவர் மொத்தம் 16 பந்துகளையே சந்தித்து 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் சாத்தினார். கடைசியில் ரெய்னாவிடம் ரன் அவுட் ஆனார். ராணா 16 ரன்களில் தோனியிடம் கேட்ச் ஆக ஆர்.கே.சிங் 2 ரன்களில் தாக்கூரிடம் காலியாக, 89/5 என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் (26) ரஸல் (88) ஆகியோர் அடித்துத் துவைத்து ஸ்கோரை 202 ரன்களுக்குக் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயுடு (39), வாட்சன் (42) மூலம் பவர் பிளே முடிவில் 75 ரன்களைக் குவித்து நல்ல அதிரடித் தொடக்கம் அமைத்து கொடுக்க சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 56 ரன்களை வெளுத்துக் கட்டி டாம் கரனிடம் ஆட்டமிழந்தார்.

சென்னை ரசிகர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றிய வினய் குமாரின் படுமோசமான கடைசி ஓவர்: நடுவரின் திருவிளையாடல் நோ-பால்

கடைசி ஓவரில் 17 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் பிராவோவிடம் ஸ்ட்ரைக். ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய வினய் குமார் பந்தை இடுப்புயர புல்டாஸாக வீச பிராவோ மட்டை முன் விளிம்பில் பட்டு லாங் லெக்கில் 3-4 வரிசைகள் சென்று தள்ளி விழுந்தது சிக்ஸ், இது இடுப்புக்கு மேல் வந்ததாக நோ-பாலும் கொடுக்கப்பட்டு, அது ஃப்ரீ ஹிட்டாகவும் ஆக அதில் 2 ரன்கள், ஆக 1 பந்தில் 8 ரன்கள் கொடுத்தார். ஆனால் அது நோபால் அல்ல, நடுவர் ஏன் நோ-பால் கொடுத்தார் என்பது சர்ச்சைக்குரியதே. நாம் முன்பே குறிப்பிட்டது போல் தோனி, கோலி, ரோஹித் சர்மா அணிகள் மோதும்போது நடுவர்களின் செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று. இந்த நோ-பால் சூப்பர் கிங்ஸ் வெற்றியில் சாம் பில்லிங்ஸ் இன்னிங்ஸுக்கு சரிசமமான பங்களிப்பு செய்துள்ளது என்றே கூற வேண்டும்.

அடுத்த பந்து ஒரு ரன். அடுத்த பந்தை வைடு வீசினார் வினய் குமார். மீண்டும் அடுத்தடுத்து 1 ரன். 2 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி, வினய் குமார் ஒன்றுமில்லாத ஒரு லெந்த் பந்தை வீச ஜடேஜா தன் முன் காலை ஒதுக்கிக் கொண்டு ஒரே விளாசல் சிக்ஸ் ஆனது சென்னை வெற்றி பெற்றது, ரசிகர்கள் முழுதும் கடைசியில் சென்னை வெற்றிக்காக பிரார்த்தித்தபடியே இருந்தனர். அவர்கள் பிரார்த்தனையை வினய் குமார் நிறைவேற்றினார். 205/5 என்று வெற்றி பெற்றது சென்னை.

வாட்சன், ராயுடு எதிர்பாரா அதிரடித் தொடக்கம்:

வினய் குமார் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் அதிர்ஷ்டம் இல்லாதவரானார், முதல் பந்து இன்ஸ்விங்கரில் வாட்சன் பேடில் வாங்க்கினார் தப்பினார், அடுத்த பந்தே புல் ஷாட் ஆடப்பார்த்தார் பந்து மட்டையின் அடியில் பட்டு ஸ்டம்புக்கு சற்று மேல் சென்றது. ஆனால் கடைசி 3 பந்துகள் ஷார்ட் பிட்ச், புல் பிட்ச் பந்தாக அமைய 1 சிக்ஸ் 2 பவுண்டரிகள் என்று வாட்சன் பிய்த்து உதற முதல் ஓவரிலேயே 16 ரன்கள்.

சாவ்லா அடுத்த ஓவரை தொடங்க தினேஷ் கார்த்திக்கின் த்ரோ ஓவர் த்ரோவாக அமைய 5 ரன்களானது. அதே ஓவரில் வாட்சன் மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்க 14 ரன்கள், ஆகவே முதல் 2 ஓவர்களிலேயே 30 ரன்கள். ஆந்த்ரே ரசல் அடுத்த ஓஅரில் 6 ரன்களையே கொடுத்தார், ஆனால் மீண்டும் சாவ்லாவிடம் கொடுக்க ராயுடு அழகாக கால்களைப் பயன்படுத்தி சாவ்லாவை 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரிலும் 17 ரன்கள், சாவ்லா 2ஓவர்களில் 31 ரன்கள். அடுத்த ரஸல் ஓவரும் 10 ரன்களுக்குச் செல்ல பவர் ப்ளே கடைசி ஓவரை டாம் கரன் வீச ஒரு புல்ஷாட் பிறகு மிடாஃபுக்கு மேல் ஒரு சிக்ஸ் என்று வெளுத்தார். ஆனால் அதே ஓவரில் புல்ஷாட்டில் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் என்ன சேதமேற்படுத்த முடியுமோ அதை ஏற்படுத்திய வாட்சன் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 6 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட்.

அதன் பிறகு ரஸல் ராயுடுவுக்கும், நரேன், ரெய்னா, ராயுடுவுக்கும் டைட்டாக வீச 2 ஓவர்களில் 8 ரன்கள்தான் வந்தது. 9வது ஓவரில் குல்தீப் யாதவ் வர 26 பந்துகளில் 39 எடுத்த ராயுடு ஆட்டமிழந்தார். நரைன் மீண்டும் 4 ரன்களையே கொடுக்க 10 ஓவர்களில் 90/2 என்று ஆனது. ரெய்னாவுக்கு அடுத்த ஓவரில் குல்தீப் பந்தில் டாம் கரன் கேட்சை விட்டார். அதன் பலன் கடைசி பந்தை சிக்சருக்குத் தூக்கினார் ரெய்னா.

தோனி வந்தவுடனேயே நரைன் பந்தில் கால்காப்பில் வாங்கினார். கடும் முறையீடு நடுவர் நாட் அவுட் என்றார், அன்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பிளம்ப் அவுட்டை நாட் அவுட் என்று நடுவர் கூற 3வது நடுவரிடம் தான் அவுட் வாங்க முடிந்தது, ஆனால் இன்று பந்து உயரமாகச் செல்வதாக ரீப்ளே காட்டியது. ரெய்னா நரைன் பந்தில் 14 ரன்களில் புல் ஆட முயன்று கேட்ச் ஆனார். தோனி 14 பந்துகளில் 7 ரன்கள் என்று அறுக்க ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவில் 103/3 என்று தடுமாறியது. 48 பந்துகளில் 100 ரன்கள் வெற்றிக்குத் தேவை.

சாம்பில்லிங்ஸ் இறங்க, தோனி அதன் பிறகு குல்தீப் யாதவ்வை நேராக ஒரு பவுண்டரியும் லாங் ஆன் மேல் ஒரு சிக்சரையும் அடித்து சென்னை ரசிகர்களை உசுப்பேற்றினார். சாம் பில்லிங்ஸ் அடுத்த ஓவரில் டாம் கரணை ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் அடித்த சிக்ஸ் அசாதாரணமானது, பிறகு டாம் கரனும் ஒரு புல்டாஸ் வீச அதுவும் சிக்ஸ் ஆனது. சாம்பில்லிங்ஸ் வெளுத்துக் கட்ட தொடங்கினார்.

இடையில் நரைன் தன் 4வது ஓவரை சிக்கனமாக வீசி 17/1 என்று முடித்தார். அன்று போலவே 4 ஓவர்களில் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி சாவ்லா பந்தை கட் செய்ய முயன்று எட்ஜ் ஆக தினேஷ் கார்த்திக் அற்புதமாகப் பிடித்தார், தோனி நடுவர் தீர்ப்புக்காக காத்திருக்காமல் வெளியேறினார். ஆனால் தோனி 28 பந்துகளில் 25 ரன்களையே எடுத்து ஆட்டமிழந்தார், ஒருவேளை சென்னை தோற்றிருந்தால் தோனியின் ஆட்டம் மந்தமானது ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

தோனி ஆட்டமிழந்த பிறகு ரஸல் வீச வர சாம் பில்லிங்ஸ் மீண்டும் புல்டாஸை ஒரு சிக்சரும் பிறகு லெக் திசை பந்து ஒன்றை இன்னொரு சிக்சரும் அடித்தார். 18 ஓவர்கள் முடிவில் 176/4. பில்லிங்ஸ் 49 ரன்களில் இருந்து அடுத்த ஓவரில் டாம் கரனின் மட்டமான ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெடில் சிக்ஸ் தூக்க அரைசதத்தை 23 பந்துகளில் அடித்து 2 பவுண்டரிகள் 5 அசகாய சூர சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து கரன் பந்தை லாங் ஆஃபில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 19 ஓவர்கள் முடிவில் 186/5. பிராவோ 1 ரன்னுடனும் ஜடேஜா 4 ரன்களுடனும் இருக்க, ஓவர் வினய் குமாரிடம் வந்தது கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்கு வினய்குமாரின் மோசமான முதல் புல்டாஸ் சிக்ஸ் அதைவிட மோசடியாக அதனை நடுவர் நோ-பால் என்று கூற இலக்கு எளிதானது ஜடேஜா சிக்ஸ் அடித்து வெற்றி பெறச் செய்தார். சாம் பில்லிங்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வினய் குமார் 1.5 ஓவர்களில் 35 ரன்கள். 2 டாட்பால்கள், ஒரு வைடு, ஒரு நோ-பால் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள். இவரை உட்கார வைத்தால்தான் கொல்கத்தா இனி வெற்றி பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x