Published : 02 Apr 2024 06:36 AM
Last Updated : 02 Apr 2024 06:36 AM
விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சீசனில் சென்னை அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. 192 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.
இறுதிக்கட்ட ஓவர்களில் 42 வயதான தோனி அதிரடியாக விளையாடி அனைவரையும் கவர்ந்தார். 16 பந்துகளை சந்தித்த அவர், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசினார். அவரது அதிரடி ஆட்டம்தான் சென்னை அணி நிகர ரன் ரேட்டில் (0.976) பெரிய அளவில் பின்னடைவை சந்திப்பதில் இருந்து காப்பாற்றியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “தோனியின் பேட்டிங் அழகாக இருந்தது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி முகாமிலும் அவர், நம்ப முடியாத வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவரது பேட்டிங் அற்புதமாக இருந்தது. இது ஒருகடினமான நாளின் முடிவில் எங்களுக்கு நேர்மறையான அதிர்வலைகளை கொடுத்தது.
ரன் ரேட் அடிப்படையில் 20 ரன்களுக்குள் இருப்பது முக்கியம். இது தோனிக்கு தெரியும். அந்த வகையில் அவர், விளையாடிய விதம் அற்புதம். இந்த ஆட்டத்தின் முடிவு நியாயமான பிரதிபலிப்பாகும். பந்து வீச்சின் போது முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தோம். அதேபோன்று பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களில் நாங்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. நாங்கள் பேட்டிங் செய்த போது, டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அழுத்தத்தை உருவாக்கினர் மற்றும் ஆடுகளத்தின் நிலைமைகளை நன்றாகப் பயன்படுத்தினர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT