Published : 02 Apr 2024 01:01 AM
Last Updated : 02 Apr 2024 01:01 AM
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, வான்கடே மைதானத்தில் முதல் முறையாக விளையாடியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் மும்பை தோல்வியை தழுவியது. போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோகித்... ரோகித்…’ என பார்வையாளர்கள் முழக்கமிட்டு மும்பையின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவை வதைத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் என்ற அறிவிப்பு வெளியானது முதல் ரோகித் ரசிகர்கள், அபிமானிகள், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அது தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
‘உங்களுக்கு பிடித்த வீரர்கள் அல்லது அணியை பற்றி நீங்கள் விரும்புவதை கூற உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால், அதற்காக மற்றொரு வீரரை தாழ்த்தி பேசக்கூடாது’ என ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக எழும் விமர்சனம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார் அஸ்வின். இருந்தும் ஹர்திக் மீதான விமர்சனமும், அவருக்கு எதிரான கூச்சலும் ஓய்ந்தபாடில்லை.
வான்கடே மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் இடையிலான போட்டியை பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் ‘ரோகித்... ரோகித்…’ என முழக்கமிட்டனர். போட்டி தொடங்குவதற்கு வெகு நேரத்துக்கு முன்பாகவே, மைதானத்துக்குள் நுழைய வரிசையில் பார்வையாளர்கள் காத்திருந்த போதே ‘ரோகித்’ முழக்கம் ஒலிக்க தோன்றியது.
டாஸ் சுண்டப்பட்டது முதல் ஆட்டத்தின் இறுதி வரை அதை கேட்க முடிந்தது. டாஸின் போது வர்ணனையாளர் பணியை கவனித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதற்கு ரியாக்டும் செய்திருந்தார். சரிவர நடந்து கொள்ளுங்கள் என்ற தொனியில் அவரது கமெண்ட் இருந்தது.
முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ரோகித் ஆட்டமிழந்தார். அதனால் அப்போதைக்கு அந்த முழக்கம் சற்றே எழாமல் இருந்தது. பின்னர் பவுண்டரி லைனில் ரோகித், பீல்ட் செய்தபோது ‘ரோகித்... ரோகித்…’ முழக்கம் ஒலிக்க தோன்றியது. அப்படி செய்ய வேண்டாம் என்றும், அமைதியாக இருக்கும் படியும் பார்வையாளர்களை சாந்தம் கொள்ளுமாறு சைகை மொழியில் ரோகித் தெரிவித்தார். இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.
தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக்: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார் ஹர்திக். “நாங்கள் எதிர்பார்த்த தொடக்கம் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆட்டத்தில் 150+ ரன்கள் எடுக்கும் நிலையில் இருந்தோம். ஆனால், எனது விக்கெட் அதனை மாற்றிவிட்டது. ஆடுகளம் பவுலர்களுக்கு உதவும் என எதிர்பார்க்கவில்லை.
ஆட்டத்தின் முடிவுகள் சில நேரங்களில் மாறும். ஒரு அணியாக எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு ஹர்திக் தெரிவித்தார்.
Hardik pandya getting booed + Rohit Rohit chants at the toss and Manjarekar's "Behave" was so funny ngl pic.twitter.com/xPf3ecwmn7
— (@45Fan_Prathmesh) April 1, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT