Published : 31 Mar 2024 11:39 PM
Last Updated : 31 Mar 2024 11:39 PM

DC vs CSK | தோனி அதிரடி வீண் - சிஎஸ்கேவை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி அணி வீரர்கள் | உள்படம்: தோனி

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்தப் போட்டியின் கடைசி கட்டத்தில் பேட் செய்த தோனி, 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்ததார்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். பவர்பிளே ஓவர்களில் டெல்லி அணி பவுலர்கள் சிறந்த லைன் மற்றும் லெந்தில் பந்து வீசி நெருக்கடி தந்தனர். ருதுராஜ் 1 ரன்னிலும், ரச்சின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதில் 12 பந்துகளை எதிர்கொண்டிருந்தார் ரச்சின். அவர்கள் இருவரது விக்கெட்டையும் கலீல் அகமது கைப்பற்றினார்.

தொடர்ந்து ரஹானே மற்றும் மிட்செல் இணைந்து நிதானமாக ஆடினர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிட்செல் 34 ரன்களிலும், ரஹானே 45 ரன்களும் எடுத்தனர். சமீர் ரிஸ்வி, ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். துபே, 18 ரன்களில் வெளியேறினார்.

களம் கண்ட தோனி: தொடர்ந்து தோனி பேட் செய்ய களத்துக்கு வந்தார். இந்த சீசனில் முதல் முறையாக அவர் பேட் செய்ய வந்திருந்த காரணத்தால் மைதானத்தில் போட்டியை பார்த்த பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 20 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது. தோனி, 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ஜடேஜா, 21 ரானால் எடுத்திருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி.

இந்த சீசனில் அந்த அணிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது. பவர்பிளே ஓவர்களில் ரன் சேர்க்க தவறியது சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

— IndianPremierLeague (@IPL) March 31, 2024

முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இணைந்து ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் அதிரடி தொடக்கம் தந்தனர். சிஎஸ்கே பந்துவீச்சை துவம்சம் செய்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்தனர். வார்னர், 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 10-வது ஓவரில் ஸ்விட்ச் ஹிட் ஆடி ஆட்டமிழந்தார். வார்னர் கொடுத்த வாய்ப்பை அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தியிருந்தார் பதிரனா.

தொடர்ந்து கேப்டன் ரிஷப் பந்த், பேட் செய்ய வந்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். பின்னர் மிட்செல் மார்ஷ் களத்துக்கு வந்தார். 15-வது ஓவரில் மார்ஷ் மற்றும் ஸ்டப்ஸ் விக்கெட்டை பதிரனா கைப்பற்றி இருந்தார். இருவரையும் யார்க்கர் வீசி போல்ட் செய்தார்.

இருந்தும் பந்த் மறுமுனையில் ரன் குவிப்பில் ஈடுபட்டார். 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவர் கவனம் ஈர்த்தார். 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 14 மற்றும் 17 ரன்கள் எடுத்தது டெல்லி. அதற்கு பந்த் ஆடிய அதிரடி ஆட்டம் காரணம். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது டெல்லி அணி. பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் குவித்திருந்தது டெல்லி. பதிரனா 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஜடேஜா மற்றும் முஸ்தபிசுர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். துஷார் தேஷ்பாண்டே, 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x