Published : 31 Mar 2024 07:49 PM
Last Updated : 31 Mar 2024 07:49 PM
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 12-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்தப் போட்டியில் குஜராத் அணிக்காக சாய் சுதர்ஷன் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றியை பெற்று தந்தது. மோகித் சர்மா அபாரமாக பந்து வீசி இருந்தார்.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. மயங்க் அகர்வால் 16 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 19 ரன்களிலும் வெளியேறினர். அபிஷேக் சர்மா, 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். 10 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது ஹைதராபாத்.
கிளாசன் அதிரடியாக ஆடி ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ரஷீத் கான் சுழலில் போல்ட் ஆனார். தொடர்ந்து மார்க்ரம் 17 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஷபாஸ் அகமது மற்றும் அப்துல் சமாத் இணைந்து 45 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குஜராத் அணிக்காக கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா, வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அந்த ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். கடைசி பந்தில் சமாத் ரன் அவுட் ஆனார். 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். இந்த சீசனில் இதற்கு முன்னர் ஆடிய இரண்டு போட்டிகளிலும் 200+ ரன்களை ஹைதராபாத் அணி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் அணி விரட்டியது. சாஹா மற்றும் கேப்டன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சாஹா, 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கில், 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின்னர் ஹைதராபாத் அணி பவுலர்கள், குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டத்தில் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
பொறுப்புடன் இன்னிங்ஸை அணுகினர் சாய் சுதர்ஷன் மற்றும் டேவிட் மில்லர். 3-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மயங்க் மார்க்கண்டே வீசிய 16-வது ஓவரில் இருவரும் இணைந்து 24 ரன்கள் எடுத்தனர். அது ஆட்டத்தில் குஜராத் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த சாய் சுதர்ஷன், கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
19.1 ஓவரில் இலக்கை எட்டியது குஜராத் அணி. சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்திருந்தார் மில்லர். 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் விஜய் சங்கர், 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தார். நடப்பு சீசனில் இது குஜராத் அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை மோகித் சர்மா பெற்றார்.
இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட் செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT