Published : 31 Mar 2024 06:04 AM
Last Updated : 31 Mar 2024 06:04 AM

அகமதாபாத்தில் இன்று மோதல்: ஹைதராபாத்தை சமாளிக்குமா குஜராத்?

கிளாசன் மற்றும் மில்லர்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்ன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியிருந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த சிஎஸ்கேவிடம் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் குஜராத் அணியின் நிகர ரன் ரேட் பாதிக்கப்பட்டது. 2 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணியானது -1.425 நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோரை மட்டுமே அணி நம்பியிருப்பது பலவீனமாகி உள்ளது. இரு ஆட்டங்களிலும் முறையே 45, 37 ரன்கள் சேர்த்த சாய் சுதர்சனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ரித்திமான் சாஹா, டேவிட் மில்லர்,விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. இவர்கள் ஒருநாள் போட்டியை போன்று நிதானமாக விளையாடுவது அணியின் ரன் குவிப்பில் தேக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

பந்து வீச்சிலும் குஜராத் அணிசமநிலையுடன் இல்லை. ஷமிக்கு மாற்றாக அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ள உமேஷ் யாதவ் முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 ஓவர்களில் 27 ரன்களை தாரை வார்த்திருந்தார். இன்றைய ஆட்டம் பிற்பகலில் நடைபெறுவதால் ஆடுகளம் உலர்ந்துகாணப்படும். எனவே சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், சாய்கிஷோர் ஆகியோர் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தனது முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்து ஐபிஎல்தொடரின் வரலாற்றில் அதிக ரன்கள்குவித்த அணியாக வரலாற்று சாதனை படைத்தது ஹைதராபாத்.

அந்த ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 16 பந்துகளிலும் அரை சதம் விளாசி மிரட்டியிருந்தனர். அதேவேளையில் ஹய்ன்ரிச் கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களும், எய்டன் மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் சேர்த்து அசத்தியிருந்தனர். இந்த பேட்டிங் வரிசையானது குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்கக்கூடும்.

பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ், அனுபவம் வாய்ந்தபுவனேஷ்வர் குமார் ஆகியோர் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்குவகித்தனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x