Published : 30 Mar 2024 07:11 AM
Last Updated : 30 Mar 2024 07:11 AM

லக்னோ - பஞ்சாப் இன்று மோதல்

கோப்புப்படம்

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தனது முதல் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் பந்து வீச்சில் கிருணல் பாண்டியாவை தவிர மற்ற அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். மார்க் வுட், டேவிட் வில்லி ஆகியோர் இல்லாதது அணியின் பந்து வீச்சு துறையின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களான மோஷின் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வழங்கிய நிலையில் யாஷ் தாக்குர் 3 ஓவர்களை வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். ரவி பிஷ்னோயின் சுழலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் ஷமர் ஜோசப் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

பேட்டிங்கில் கே.எல்.ராகுல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருந்தனர். குயிண்டன் டி காக், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி,தீபக் ஹூடா, கிருணல் பாண்டியா ஆகியோர் ஏமாற்றம்அளித்தனர். கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டிருந்த ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டாயினிஸிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்படவில்லை. சொந்தமண்ணில் வெற்றியை பதிவு செய்ய வேண்டுமானால் இவர்கள் ஒருங்கிணைந்த திறனை வெளிப்படுத்துவது அவசியம்.

ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்யிருந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஷிகர் தவண், ஜானிபேர்ஸ்டோ ஜோடி பவர்பிளேவை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது பலவீனமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடும் ஷிகர் தவண் ஸ்டிரைக் ரேட்டை உயர்த்திக் கொள்வது அவசியம்.

கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட பிரப்ஷிம்ரன் சிங் இம்முறை இரு ஆட்டங்களிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். அதேவேளையில் இரு ஆட்டங்களிலும் நம்பிக்கை அளித்த ஆல் ரவுண்டரான சேம் கரணிடம்இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ஜிதேஷ் சர்மாவும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும். பந்து வீச்சில் காகிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல்,ஹர்பிரீத் பிரார் ஆகியோர் லக்னோ பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x