Published : 30 Mar 2024 06:42 AM
Last Updated : 30 Mar 2024 06:42 AM
ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
186 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லிய அணியால் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவையாக இருந்தன. இந்த ஓவரை வீசிய அவேஷ் கான் அற்புதமாக செயல்பட்டு வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
முதல் இரு பந்துகளையும் யார்க்கர்களாக வீசிய அவேஷ் கான், அடுத்த பந்தை ஆஃப் ஸ்டெம்புக்கு நன்கு வெளியேவும், 4-வது பந்தை ஸ்லாட் பந்தாகவும் வீசி டெல்லி அணியை இலக்கை நெருங்க முடியாத நிலைக்கு கொண்டு சென்றார்.
ஏனெனில் முதல் 4 பந்துகளில் டெல்லி அணி 3 ரன்களே எடுத்திருந்தது. 2 பந்துகளில் 14 ரன்கள் வேண்டும் என்ற சாத்தியம் இல்லாத சூழ்நிலையில் அந்த பந்துகளையும் நேர்த்தியாக வீசி ராஜஸ்தான் அணி வெற்றிக் கோட்டை கடக்க உதவினார் அவேஷ்கான்.
அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்துஅச்சுறுத்தல் கொடுத்து கொண்டிருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களத்தில் நின்றதால் டெல்லி அணி வெற்றிபெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவேஷ் கான் ஓவரில் ஸ்டப்ஸ் 2 பந்துகளை சந்தித்தார். மீதமுள்ள 4 பந்துகளையும் அக்சர் படேல் எதிர்கொண்டிருந்தார். பார்மில் இல்லாத அவரால் பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்ள முடியாமல் போனது.
வெற்றிக்கு பின்னர், 27 வயதான அவேஷ் கான் கூறியதாவது: நான் கடைசி ஓவரை வீசுவது இதுமுதல் முறையல்ல. கடந்த ஆண்டுராஜஸ்தானுக்கு எதிராக விளையாடிய போது இதேபோன்று கடைசிஓவரை வெற்றிகரமாக வீசியிருந்தேன். டெல்லி அணிக்காக விளையாடிய போதிலும் கடைசி ஓவரை வீசியுள்ளேன். இதுவரை வீசிய இறுதி ஓவர்களில் இது சிறப்பானது. அனைத்து பந்துகளையும் ஒரே இடத்தில், வைடு யார்க்கர்களாக வீசினேன்.
லக்னோ, டெல்லி அணிகளுக்காக விளையாடிய போது பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசுவேன். ராஜஸ்தான் அணியில் தற்போது பவர்பிளேவுக்கு பின்னர் 2 ஓவர்களையும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் பந்து வீசுகிறேன். அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் திட்டங்களை செயல்படுத்த முழு சுதந்திரம் கொடுக்கிறார்கள். இது உதவியாக உள்ளது. சஞ்சு சாம்சன் பந்து வீச்சாளர்களுக்கான கேப்டன். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பனிப்பொழிவு இல்லை. இது துல்லியமாக செயல்பட எனக்கு உதவியாக இருந்தது. இவ்வாறு அவேஷ் கான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT