Published : 21 Feb 2018 05:39 PM
Last Updated : 21 Feb 2018 05:39 PM
சேவாகுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் முச்சதம் கண்ட ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்ற கருண் நாயர் அந்த முச்சதம் ஏற்படுத்திய தாக்கம், அதன் பிறகான கனவுகளிலிருந்து மெள்ள மீண்டு வர முயற்சி செய்து வருகிறார்.
விஜய் ஹசாரே காலிறுதியில் ஹைதராபாத்தை எதிர்கொள்வதையடுத்து கோட்லாவில் சக வீரர்களுடன் பொறுப்பு கேப்டனான கருண் நாயகர் கடும் பயிற்சியில் ஈடுபட்டார்.
முச்சதம் கண்ட வீரரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்தது என்று கூற முடியாவிட்டாலும், மிகக் குறைந்த வாய்ப்புகள் அளிக்கப்பட்டு கழற்றி விடப்பட்டது அவரை பாதிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. 300 ரன்கள் கூட ஒருவீரருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்காத ஸ்கோர் என்றால் எந்த ஒரு வீரருக்கும் வெறுப்பு இருக்கவே செய்யும், தென் ஆப்பிரிக்காவுக்கு கையும் நகராத, காலும் நகராதத் தடுமாறும் ரோஹித் சர்மாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போது தனக்கு வாய்ப்பு வரவில்லை என்று முச்சதம் எடுத்த வீரர் ஒருவர் வருந்துவதில் தவறில்லை என்ற எண்ணமே கிரிக்கெட் வட்டாரங்களில் மேலிட்டுள்ளது.
ஆனால் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்களை எடுத்த கருண் நாயர் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 26,0, 23 மற்றும் 5 என்ற ஸ்கோர்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்து 3 மாதங்கள்தான், முச்சதத்துக்குப் பிறகு கோடரி விழுந்தது. ஆனால் அதற்காக கருண் நாயர் யாரையும் புகார் கூறவில்லை, தன்னையே நொந்து கொள்கிறார்.
“உள்ளபடியே கூற வேண்டுமெனில் வெறுப்பாகத்தான் இருந்தது. நான் பார்மில் இல்லை என்று அர்த்தமல்ல. நல்ல தொடக்கத்தின் மீது இன்னிங்சை கட்டமைக்கவில்லை. 20-25 எடுத்து ஆட்டமிழந்தேன்.
அதன் பிறகு என்னையே நான் கேட்டுக் கொண்டேன், எதற்காக இந்த ஆட்டத்தை நாம் ஆடுகிறோம் என்று. நான் மகிழ்வுடன் ஆடவில்லை. என் மீதே அதிக அழுத்தம் செலுத்திக் கொண்டேன். அந்த முச்சதத்துக்குப் பிறகே வாழ்க்கை ஒரு முழு வட்டமாகத் திரும்பியது. உயர்வையும் கண்டேன், தாழ்வையும் கண்டேன். ஆனால் எதுவாக இருந்தாலும் உணர்ச்சி அளவில் கட்டுப்பாடு தேவை என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டேன். ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடக் கற்றுக் கொண்டேன் இதன் மூலம் மெல்ல என் மீதிருந்த அழுத்தத்தைக் குறைத்து கொண்டேன்” என்றார் கருண் நாயர்.
பார்வை:
இந்திய அணியின் நடப்புத் தேர்வுக்குழு கோலியின் மேற்பார்வையில் புதிய திறமைகளுக்கு வாய்ப்பளிக்கிறது என்ற பெயர் எடுத்தாலும் அதன் இன்னொரு பக்கம் சில திறமைகள் வளர்த்தெடுக்கப்படவில்லை, சில திறமைகள் வாய்ப்பளிக்கப்படுவதில்லை, இது போக அணிக்குள்ளேயே நன்றாக ஆடிக்கொண்டிருப்பவர்களை உட்கார வைப்பது என்ற ஒரு கேப்டன் ‘கொம்பு’ முளைத்துள்ளதாகவே கிரிக்கெட் குறித்த உண்மையான ஆர்வம் கொண்ட சிலரிடம் கேட்டபோது கருத்து எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT