Published : 26 Mar 2024 04:03 PM
Last Updated : 26 Mar 2024 04:03 PM
பெங்களூரு: "டி20 போட்டிகளில் ஓப்பனிங் இறங்கி அதிரடியான தொடக்கம் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 6-வது லீக் போட்டியில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இப்போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.
போட்டிக்குப் பின் பேசிய விராட் கோலி, "டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்தும் நோக்கில் பேசப்படும் பேச்சுகளில் எனது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எனக்குள் அவற்றை தாண்டி வெளிக்காட்ட நிறைய இருக்கிறது.
டி20 போட்டிகளில் ஓப்பனிங் இறங்கி அதிரடியான தொடக்கம் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால், விக்கெட் வரிசையாக விழும்போது சூழலுக்கேற்ப ஆட வேண்டியுள்ளது. இந்தப் போட்டியை கடைசி வரை நின்று முடித்துக் கொடுக்காமல் போனதில் ஏமாற்றமே. எனினும், இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு ஆடுவதால் இது ஒன்றும் மோசமான இன்னிங்ஸ் இல்லை.
கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் நாட்டில் இல்லை. மக்கள் எங்களை அடையாளம் காணாத இடத்தில் இருந்தோம். இயல்பான மனிதர்களாக உணர்வதற்காக நேரம் செலவழித்தோம். குடும்பத்துடன் நேரம் செலவிட்டது நல்ல அனுபவமாக இருந்தது. குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கு நன்றி.
இரண்டு மாதங்கள் சாதாரண மனிதர்களாக தெருவில் இறங்கி யாராலும் அங்கீகரிக்கபடாமல் நடந்து சென்ற தருணங்கள் அற்புதமாக இருந்தன. தொடர்ச்சியாக நான் ஆடும் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டு என் சிறப்பான பங்களிப்பை அளிப்பேன் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமான கோலி மிஸ் செய்தார். கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியர் இரண்டாவது குழந்தையை வரவேற்றது இதற்கு காரணமாக அமைந்தது.
அவர் இல்லாத சமயத்தில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு விராட் கோலி சேர்க்கப்பட கூடாது என்கிற ரீதியில் பேச்சுக்கள் எழுந்தன. தற்போது அவற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோலியின் பேச்சு அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT