Published : 25 Mar 2024 05:55 AM
Last Updated : 25 Mar 2024 05:55 AM

வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் பெங்களூரு அணி: பஞ்சாபுடன் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு: ஐபிஎல் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியானது, சிஎஸ்கே அணியிடம் தோல்வி கண்டிருந்தது. எனவே, இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வெற்றி கணக்கைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சிஎஸ்கே அணியுடனான ஆட்டத்தின்போது பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக விளையாடினர். அவர்களிடமிருந்து மற்றுமொரு சிறப்பான ஆட்டம்,பஞ்சாப் அணியுடன் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியின் வழக்கமான அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதைப் போலவே ரஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகியோரும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பந்துவீச்சுப் பணியை முகமது சிராஜ், யஷ் தயாள், அல்சாரி ஜோசப், கரண் சர்மா, கேமரூன் கிரீன் ஆகியோர் கவனித்துக் கொள்வர். முதல் போட்டியில் கேமரூன் கிரீன் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களைச் சாய்த்திருந்தார். எனவே, இந்த ஆட்டத்தில் முழுத் திறனையும் வெளிப்படுத்தி முதல் வெற்றியைச் சுவைக்க பெங்களூரு அணி வீரர்கள் காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது,முதல் வெற்றியைப் பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஷிகர் தவண், ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், சேம் கரண், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் என அந்த அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. டெல்லி அணிக்கெதிரான போட்டியில் சேம் கரண், லிவிஸ்டன் ஆகியோர் அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். அவர்களிடமிருந்து மற்றுமொரு சிறப்பான மட்டை வீச்சுத் திறன் இந்த ஆட்டத்தில் வெளிப்படக்கூடும்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தங்களது திறமையை மீண்டும் நிரூபிக்கக் காத்திருக்கின்றனர். டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ஹர்ஷல் பட்டேலும், அர்ஷ் தீப் சிங்கும் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x