Published : 25 Mar 2024 05:45 AM
Last Updated : 25 Mar 2024 05:45 AM
ஜெய்ப்பூர்: ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் வீரர்கள் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன் குவித்தனர்.
இந்த ஆட்டம் ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லரும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடினர். ஆனால் ஜாஸ்பட்லர் 9 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்த நிலையில், நவீன் உல் ஹக்பந்தில் கே.எல். ராகுலிடம் கேட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 பந்துகளில் 24 ரன்கள் (ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி) எடுத்து, மோசின் கான் பந்தில், கிருணல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சனும், ரியான் பராக்கும் இன்னிங்ஸை கட்டமைத்தனர்.
ரியான் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து நவீன் உல் ஹக்பந்தில் வீழ்ந்தார். ஷிம்ரன் ஹெட்மயர் 5 ரன்களில் பெவிலியன் திரும்ப, சஞ்சு சாம்சனுக்கு துணையாக துருவ் ஜூரெல் 12 பந்துகளில் 20 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சாம்சன் 52 பந்துகளில் 82 ரன்கள்குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2, மோசின் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடத் தொடங்கியது. கே.எல்.ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக குயின்டன் டி காக் களமிறங்கினார். ஆனால், குயின்டன் டி காக் 4, தேவ்தத் படிக்கல் 0 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்தில் வீழ்ந்தனர். அடுத்து வந்த ஆயுஷ் பதோனி ஒரு ரன்னில், நந்த்ரே பர்கர் பந்தில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா, ஓரளவுக்கு நிலைத்து விளையாடினார். அவர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுலுடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து அதிரடியாக பந்துகளை பறக்கவிட்டார்.
இருவரும் வேகமாக ரன்களைக் குவித்ததால் லக்னோ வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் துருவ் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.
கடைசி ஓவர்களில் நிக்கோலஸ்பூரன் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. பூரன்64 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி கண்டது.ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் சார்பில் போல்ட் 2, நந்த்ரே பர்கர், அஸ்வின், சாஹல், சந்தீப்சர்மா ஆகியோர் தலாஒரு விக்கெட் சாய்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT