Published : 24 Mar 2024 11:54 PM
Last Updated : 24 Mar 2024 11:54 PM
அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 ஆட்டத்தில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டதில் குஜராத் டைட்டன்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மாலை 7.30 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்கார்களாக இறங்கிய ரிதிமான் சாஹா 19 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். எனினும் மும்பை பவுலர்களின் பச்சுவீச்சால் குஜராத் வீரர்களால் பெரியளவில் ரன்களை குவிக்கமுடியவில்லை.
அஸ்மத்துல்லா 17 ரன்கள், டேவிட் மில்லர் 12 ரன்கள், விஜய் ஷங்கர் 6, ராகுல் டேவாட்டியா 22 என 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்திருந்தது குஜராத் டைட்டன்ஸ்.
168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் இறங்கினர். இதில் இஷான் கிஷன் 0 ரன்களில் அவுட் ஆகி வெளியேறவே, ரோஹித் 43 ரன்கள் நின்று ஆடினார்.
நமான் திர் 20 ரன்கள், டெவால்ச் பிரேவிஸ் 46, திலக் வர்மா 25, டிம் டேவிட் 11 என சென்று கொண்டிருந்த ஆட்டத்தில், 8 பந்துகளில் 19 ரன்கள் என்ற அழுத்ததுடன் இறங்கினார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. முதல் பாலிலேயே சிக்ஸர், இரண்டாவது பாலில் ஃபோர் என்று பறக்கவிட்டு அசத்தினார். ஆனால் அடுத்த பாலில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்தடுத்து ஷாம்ஸ் முரளி, பியூஸ் சாவ்லா என விக்கெட்கள் விழ இறுதியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது.
2013ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT