Published : 24 Mar 2024 07:13 AM
Last Updated : 24 Mar 2024 07:13 AM

கேப்டன் பதவியில் நெருக்கடியை உணரவில்லை: சொல்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை: ஐபிஎல் 17-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் நேற்று முன்தினம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 174 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 8 பந்துகளை மீதும் வைத்து 18.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்மான் (4 விக்கெட்கள்) முக்கிய பங்களிப்பு செய்தார். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா (37), அஜிங்க்ய ரஹானே (27), டேரில் மிட்செல் (22), ஷிவம் துபே (34), ரவீந்திர ஜடேஜா (25) ஆகியோர் சிறந்த திறனை வெளிப்படுத்தினர். வெற்றிக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: தொடக்கத்தில் இருந்தே ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். அங்கும் இங்குமாக 2 முதல் 3 ஓவர்களில் ரன்களை வழங்கியிருந்தோம். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் வந்தவுடன், நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். 10 முதல்15 ரன்கள் குறைவாக கொடுத்திருந்தால் மேலும் சிறப்பானதாக இருந்திருக்கும். பெங்களூரு அணியினர் சிறப்பாக ஆட்டத்துக்குள் திரும்பி வந்தனர்.

மேக்ஸ்வெல், டு பிளெஸ்ஸிஸ் ஆகியோரை விரைவாக ஆட்டமிழக்கச் செய்தது திருப்புமுனையாக அமைந்தது. இது அடுத்த 5 முதல் 6 ஓவர்களை கட்டுப்படுத்த உதவியது. இதுதான் முக்கியமான விஷயம். கேப்டன் பணியை எப்போதும் ரசிக்கிறேன். மாநில அணியை வழிநடத்திய போதுகூட அழுத்தத்தை உணர்ந்தது இல்லை. ஒரு முறை கூட எதனாலும் அழுத்தப் பட்டதாக உணரவில்லை. துரத்தலின் போது தோனி என்னுடன் இருந்தார்.

அணியில் அஜிங்க்ய ரஹானே உட்பட எல்லோரும் அடித்து விளையாடக்கூடியவர்கள். பேட்டிங் குழுவின் பங்கு தெளிவாக உள்ளது. இது அதிகம் உதவுகிறது. தொடரை சிறப்பாக தொடங்கினாலும் கூடுதல் கவனம்செலுத்த வேண்டிய இரண்டு, மூன்றுவிஷயங்கள் உள்ளன. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் நிலைத்து நின்றிருந்தால் துரத்தல் எளிதாக இருந்திருக்கும். இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x