Published : 23 Mar 2024 07:21 AM
Last Updated : 23 Mar 2024 07:21 AM
சென்னை: ஐபிஎல் 17 சீசன் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கின.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடக்க நிகழ்வாக அந்தரத்தில் பறந்து வந்தபடி பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் தேசிய கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தார். பின்னர் அந்த கொடியை மற்றொரு பாலிவுட் நடிகரான டைகர் ஷெராப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இருவரும் சில பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடினர். இதன் பின்னர் மைதானத்தில் பைக்கில் வலம் வந்தனர்.
அடுத்த நிகழ்வாக சோனு நிகம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மேடையில் தோன்றி வந்தே மாதரம் பாடலை தங்களது குழுவினருடன் இணைந்து பாடினார்கள். தொடர்ந்து சிவாஜி படத்தில் இடம் பெற்ற பல்லே லக்கா பல்லே லக்கா, குரு படத்தில் இடம் பெற்ற நன்னாரே நன்னாரே, உயிரே படத்தில் இடம் பெற்ற தைய்ய, தைய்ய தய்யா மற்றும் ஜெய்ஹோ பாடல் பாடப்பட்டது. ஆயுத எழுத்து படத்தில் இடம் பெற்ற ஜனகணமன பாடலும் ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த குழுவினருடன் சுவேதா மோகனும் இணைந்து பாடினார்.
சுமார் அரை மணி ரேநம் இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ரசிகர்கள் சிஎஸ்கே, சிஎஸ்கே என முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து விழா மேடையில் ஐபிஎல் டிராபியை நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கொண்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் ஆஷிஸ் ஷெலார், ஐபிஎல் சேர்மன் அருண் துமால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் சோனு நிகம், நடிகர்கள் அக் ஷய் குமார், டைகர் ஷெராப், ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT