Published : 23 Mar 2024 07:46 AM
Last Updated : 23 Mar 2024 07:46 AM
சண்டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
அதிரடி பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் தற்போது முழு உடற்தகுதியுடன் கிரிக்கெட் களத்துக்கு திரும்பி உள்ளார். 14 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ள அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த சீசனில் டெல்லி அணி அணி 10வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது ரிஷப் பந்த் வருகையால் அணியின் செயல் திறன் மேம்படக்கூடும்.
ரிஷப் பந்த் இன்றைய ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வது சந்தேகம்என்றே கூறப்படுகிறது. இந்த நிலை உருவானால் மேற்கு இந்தியத் தீவுகளில் ஷாய் ஹோப் அல்லது தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் விக்கெட் கீப்பராக செயல்படக்கூடும். பேட்டிங்கை பொறுத்தவரையில் ரிஷப் பந்துடன் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் வலுவாக உள்ளனர். பந்து வீச்சில் அன்ரிச் நோர்க்கியா, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.
ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த சீசனில் 8வது இடம் பிடித்திருந்தது. முன்னதாக 2019 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 6வது இடத்துடன் தொடரை நிறைவு செய்திருந்தது. அதிகபட்சமாக 2014ம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி 2வது இடம் பிடித்திருந்தது.
இம்முறை பேட்டிங்கில் ஜிதேஷ் சர்மா, ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தக்கூடும். ஆல்ரவுண்டர்களாக சிகந்தர் ராஸா, சேம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், ரிஷி தவான் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். பந்து வீச்சில் காகிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல், நேதன் எலிஸ் ஆகியோர் வலுசேர்க்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT