Last Updated : 18 Feb, 2018 01:03 PM

 

Published : 18 Feb 2018 01:03 PM
Last Updated : 18 Feb 2018 01:03 PM

இதே போன்று வீசினால் குல்தீப் யாதவ், சாஹல், ஆஸ்திரேலியாவில் பிரபலமடைவார்கள்: இயன் சாப்பல் புகழாரம்

தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடரில் 5-1 என்று இந்தியாவிடம் உதை வாங்கியதற்கு முக்கியக் காரணம் இடது, வலது ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரே.

தென் ஆப்பிரிக்கா ரிஸ்ட் ஸ்பின்னர்களிடன் சரணடைவது இது முதல் முறையல்ல என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணணையாள வல்லுநருமான இயன் சாப்பல் 1935-36-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி ரிஸ்ட் ஸ்பின்னர்களைக் கொண்டு தென் ஆப்பிரிக்காவை மடக்கியதை நினைவு கூர்ந்து ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ பத்தியில் எழுதும் போது குல்தீப், சாஹலைப் புகழ்ந்துள்ளார்.

அந்தப் பத்தியில் அவர் எழுதியதிலிருந்து சில...:

தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களை ரிஸ்ட் ஸ்பின்னர்கள் திணறடிப்பது புதிதல்ல. 1935-36 தொடரில் ஆஸ்திரேலியாவின் பில் ‘டைகர்’ ஓரெய்லி, கிளாரி தி ஃபாக்ஸ் கிரிம்மெட் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் வரிசையை நசுக்கி அழித்தனர்.

குல்தீப், சாஹல் போல் அந்த லெஜண்டரி ரிஸ்ட் ஸ்பின்னர்களும் தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கின் மீது மிகப்பெரிய பதற்றத்தைத் திணித்தனர். தென் ஆப்பிரிக்காவிலேயே அவர்களுக்கு பெரிய சிம்ம சொப்பனமாக இருவரும் திகழ்ந்தனர்.

அந்த 1935-36 தொடரில் ஆஸ்திரேலிய பவுலர்கள் வீழ்த்திய 98 தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளில் ஓ’ரெய்லியும், கிரிம்மெட்டும் 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிரிம்மெட் சராசரி 14.59, ஓ ரெய்லியின் சராசரி 17.04, ஆனால் குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் 13.88 என்ற சராசரியிலும் சாஹல் 16.37 என்ற சராசரியிலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அந்த ஓ’ரெய்லி, கிரிம்மெட், ஆகியோர் சாஹல், குல்தீப் பந்து வீச்சுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மடிந்ததை வெகுவாகப் பாராட்டியிருக்க கூடும். அதிலும் குறிப்பாக இருவரது பந்து வீச்சை புரிந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடவியதை அவர்கள் இருவரும் இன்னும் மகிழ்ச்சியுடன் அலசியிருப்பார்கள். அவர்களது ரான் ஒன், அதாவது நார்மல் லெக் ஸ்பின்னுக்கு எதிரான ஒரு பந்தை எந்த பேட்ஸ்மெனும் கணிக்க முடியாத காரணம்தான் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகிறார்கள்.

இதனால் பெரிய ஷாட்களுக்குப் போகும்போது தயக்கம் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி மிஸ்ஹிட் செய்கின்றனர்.

இந்தத் தவறை குல்தீப், சாஹல் ஜோடி கருணையற்றுப் பயன்படுத்திக் கொண்டனர். இருவரும் தைரியமானவர்கள், சாதுரியமானவர்கள் பந்தை எப்போது மேலே தூக்கி வீச வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றனர்.

பதற்றமான சூழலில் ரஹானேயின் தைரிய கேப்டன்சி:

நான் முதன் முதலில் குல்தீப் யாதவ் பந்து வீச்சை தரம்சலா டெஸ்ட் போட்டியில் பார்த்தேன். அஜிங்கிய ரஹானே தைரியமாக கேப்டன்சி செய்தார். ஆனால் குல்தீப்பின் அமைதியான பந்து வீச்சு போட்டியின் நிலையையே மாற்றி விட்டது. சாதாரண இடது கை ஸ்பின்னரை விட குல்தீப் துல்லியமாக வீசுகிறார்.

குறுகிய வடிவப் போட்டிகளில் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கான கிராக்கி அதிகரித்து வரும் நிலையில் இந்தியா ஒரு தனித்துவமான திறமை கொண்ட ஜோடியை அறிமுகம் செய்துள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னராக நன்றாக விளங்குவதற்கு நிறைய திறமை வேண்டும். மேலும் இந்தக் கலையை விநியோகிக்க அவர்களுக்கு பெரிய இதயம் வேண்டும்.

ஆஸ்திரேலியா பயணத்தில் இந்திய அணி எந்த மாதிரியான அணுகுமுறையைக் கடைபிடிக்கும் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது. 1985 உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் விளையாடிய ரவிசாஸ்திரியும் நன்கு அறிவார், ரிஸ்ட் ஸ்பின் எந்த மாதிரியான நல்ல முடிவுகளைக் கொடுக்கும் என்பதை. அந்தத் தொடரை இந்தியா வென்றது, சாஸ்திரி தொடர் நாயகனானார். அந்தத் தொடரில் சாஸ்திரியைப் போல் எல்.சிவராமகிருஷ்ணனின் லெக் ஸ்பின்னும் பெரிய பங்களிப்பு செய்தது.

பெரிய ஆஸ்திரேலிய மைதானங்களில் ரிஸ்ட் ஸ்பின் பெரிய அளவில் வெகுமதிகளை வழங்கும். குல்தீப், சாஹல் தங்கல் பார்மைத் தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் இருவரும் பெரிய அளவுக்கு பிரபலமாவார்கள். ஏனெனில் ரிஸ்ட் ஸ்பின் பந்துவீச்சின் ஆன்ம வீடு ஆஸ்திரேலியாவாக இருந்துள்ளது.

இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x