Published : 22 Mar 2024 06:36 AM
Last Updated : 22 Mar 2024 06:36 AM
ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சிஎஸ்கே கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி, 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்திருந்தார். சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக 220 ஆட்டங்களில் விளையாடி உள்ள தோனி 22 அரை சதங்களுடன் 4,508 ரன்கள் குவித்திருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார்.
அந்த சீசனில் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. அவரது தலைமைப்பண்பு மீது விமர்சனங்கள் எழுந்ததால் 8 ஆட்டங்களுக்குப் பின்னர் மீண்டும் தோனியிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் எந்வித பயனும் இல்லாமல் அந்த சீசனை சிஎஸ்கே 9-வது இடத்துடன் நிறைவு செய்தது.
ஆனால் கடந்த ஆண்டு தோனி தலைமையில் வலுவாக மீண்டு வந்து கோப்பையை வென்று சாதனை படைத்தது சிஎஸ்கே. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் 17-வது சீசனை அணுகும் சிஎஸ்கே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக தேர்வு செய்துள்ளது. 2019-ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை ஐபிஎல் தொடரில் 52 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.
கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மடைமாற்றி விட்டுள்ள தோனி, இந்த சீசனில் முழுமையாக விளையாடுவாரா? என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. போட்டிகள் தொடங்குவதற்கு சில வாரத்துக்கு முன்னதாக தோனி சமூக வலைதளத்தில் இந்த சீசனில் புதிய ரோலை ஏற்கப்போவதாக பூடகமாக கூறியிருந்தார். அப்படியிருக்கையில் தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகி எதிர்கால அணியை உருவாக்குவதற்கான அடித்தளத்துக்கு உரமிட்டுள்ளார்.
42 வயதான தோனி, வழக்கம் போன்றே இம்முறையும் பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வலுவாக காணப்படும் அவர், அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க தோனி, கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான போது எப்படி இருந்தாரோ (நீண்ட தலைமுடியுடன்) அதே தோற்றத்தில் தற்போது பயிற்சியில் வலம் வருகிறார். இதை பார்க்கும் போது அவரிடம் ஏதேனும் திட்டங்கள் இருக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறும்போது, “சென்னை அணியின் எதிர்காலத்தை கருதியே புதிய கேப்டன் நியமன முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். முடிவுகளை எடுக்கக்கூடியதில் அவர் சிறப்பானவர்.
தோனி முழு சீசனிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவரது உடல்தகுதி சிறப்பாக உள்ளது. தோனி தயாராகும் விதத்தை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். வலைப்பயிற்சியில் நன்றாக பந்துகளை விளாசுகிறார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT