Published : 21 Mar 2024 03:12 PM
Last Updated : 21 Mar 2024 03:12 PM
"தோனி கிரிக்கெட் ஆட்டத்தை நேசிப்பவர்தான். ஆனால் கிரிக்கெட்தான் எல்லாமே என்று நினைப்பவர் அல்ல" என்று இந்திய முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். தோனி பல வாசல்களை நோக்கி நகர்பவர் என்கிறார் ஜாகீர் கான்.
42 வயதாகும் எம்.எஸ்.தோனி, ‘என்னடா ரிட்டையர் ஆக விட மாட்டேங்ராங்க’ என்ற தொனியில் மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக 2024 ஐபிஎல் தொடருக்கு தயாராகியுள்ளார். தோனி சிஎஸ்கேவில் நீடிப்பது முக்கியமாக வர்த்தக நோக்கங்களுக்காக இருக்கலாம். ஏனெனில் ஒரு கிரிக்கெட் வீரராக தோனியின் காலம் 2015 உலகக்கோப்பையுடனேயே முடிந்துவிட்டது. ஆனால் ஒரு வர்த்தக ஐகானாக, ஒரு பிராண்டாக அவர் பெயரைச் சுற்றி ஒளிவட்டம் நிலவுவதால் அவர் கிரிக்கெட் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவே படுகிறது.
இந்நிலையில் ஜியோ சினிமாவில் தோனி பற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜாகீர் கான், கூறும்போது, “எம்.எஸ்.தோனி கிரிக்கெட் ஆட்டத்தை நேசிப்பவர்தான். அவரது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த அங்கம் தான் கிரிக்கெட். ஆனால் கிரிக்கெட்தான் தனக்கு எல்லாமே என்று நினைக்கக் கூடியவர் அல்ல தோனி.
கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது ஆட்டத்திலிருந்து கொஞ்சம் விலகி நிற்பது முக்கியம். கிரிக்கெட் தான் எல்லாமும் என்று எல்லோரும் கருத மாட்டார்கள். எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இத்தகைய நிலையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
கிரிக்கெட்டிலிருந்து விலகி விட்டால் நமக்கு இருக்கும் தெரிவுகள் மிகக் குறைவு. நிறைய தடகள வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆட்டத்திற்கு அவர்கள் தங்களையே ஒப்புக் கொடுத்திருப்பார்கள். ஆனால் வெளியே வந்தால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலைதான் இருக்கும்.
எனவேதான் எம்.எஸ்.தோனி நீண்ட காலத்திற்கு முன்பே கிரிக்கெட்தான் தனக்கு எல்லாமும் என்ற கருத்தோட்டத்தை நிராகரித்தார். கிரிகெட்டை நேசிப்பார். ஆனால் அதுதான் எல்லாமுமே என்று கருத மாட்டார். விளையாட்டிற்கு வெளியே அவர் பல வேலைகளில் ஈடுபட்டிருந்தார். உதாரணமாக பைக்குகள் அவரது சிறப்பு ஈர்ப்பு, அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்” என்றார் ஜாகீர் கான்.
இவருடன் இருந்த சுரேஷ் ரெய்னா கூறும்போது, "தோனி இன்னும் 5 ஆண்டுகள் ஐபிஎல் ஆட வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT