Published : 19 Mar 2024 10:46 PM
Last Updated : 19 Mar 2024 10:46 PM
கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் பிரப்சிம்ரன் சிங். இந்த முறையும் தனது அதிரடி பாணி ஆட்டத்தை அவர் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் உள்ளூர் கிரிக்கெட்டிலும் நல்லமுறையில் ஆடி ரன் சேர்த்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்: கடந்த 2008 முதல் ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது அபார ஆட்டத்தினால் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் அங்கம் வகித்த அணி. 2008 சீசனில் அரையிறுதி மற்றும் 2014 சீசனில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது. மற்ற அனைத்து சீசன்களிலும் லீக் சுற்றோடு விடை கொடுத்துள்ளது. 2014-க்கு பிறகு டேபிளில் டாப் 4 இடங்களை பிடிக்க தவறியுள்ளது பஞ்சாப் அணிக்கு சங்கடம். கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் இந்த சீசனில் டாப் 4-க்கு முன்னேறுவது பஞ்சப்பின் முதல் இலக்கு.
நடப்பு ஐபிஎல் சீசனை பொறுத்தவரையில் ஆன்-பேப்பரில் பார்க்கும்போது அபாயகரமான அணியாக உள்ளது. ஆனால், களத்தில் அவர்களது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்துதான் சீசனின் செயல்பாடு இருக்கும். அணியின் பெயரை மாற்றிய உரிமையாளர்கள் இப்போது ஹோம் கிரவுண்டை மாற்றி உள்ளார்கள். நடப்பு சீசனில் பஞ்சாப் அணி முல்லான்பூர் மைதானத்தில் விளையாட உள்ளது. இங்கு இதுவரை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
டிசம்பரில் நடந்த ஏலத்தில் 8 வீரர்களை வாங்கியது அந்த அணி. இதில் ஹர்ஷல் படேல், ரைலி ரூசோ, கிறிஸ் வோக்ஸ் போன்ற வீரர்களை வாங்கியது. கேப்டன் தவான் அந்த அணியின் முக்கிய வீரராக இருப்பார். 2011 சீசன் முதல் ஒவ்வொரு சீசனிலும் 300+ ரன்களை எடுத்துள்ளார். அதனை இந்த சீசனிலும் அவர் தொடர வாய்ப்புள்ளது.
பேட்டிங்கில் தவான், பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, லியம் லிவிங்ஸ்டன், ரைலி ரூசோ, ஜிதேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர். சாம் கர்ரன், சிகந்தர் ராசா, கிறிஸ் வோக்ஸ், ரிஷி தவான் போன்ற ஆல்ரவுண்டர்கள் அணியை பேலன்ஸ் செய்கின்றனர். அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ஹர்ஷல் படேல், வித்வேத் கவேரப்பா போன்ற இந்திய பந்து வீச்சாளர்களுடன் ரபாடா மற்றும் நேதன் எல்லிஸ் ஆகிய அயல்நாட்டு வீரர்களும் உள்ளனர்.
பிரப்சிம்ரன் சிங்: 23 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2019 முதல் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார். கடந்த சீசனுக்கு முன்னர் வரை ஆடும் லெவனில் இவருக்கான வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை.
தோனியின் பயோ-பிக் படத்தில் ‘வாய்ப்புக்காக காத்திருக்குற கொடுமை என்ன மாதிரி ஆளுக்குதான் தெரியும் சார்’ என்ற வசனம் வரும். அது போல தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தார். அந்த வாய்ப்பு கடந்த சீசனில் வந்தது. அதில் சரியாக பயன்படுத்தி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த சீசனில் 14 போட்டிகளில் ஆடி 358 ரன்கள் எடுத்தார். டெல்லி அணிக்கு எதிராக சதம் விளாசினார். 19 சிக்ஸர்களை பறக்கவிட்டு இருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 150. அதிக ஃபோர்கள் அடித்த வீரர்களில் 15-வது இடம். அணிக்காக இன்னிங்ஸை ஓப்பன் செய்து அசத்தினார்.
அதன் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். ரஞ்சி கோப்பை, சையத் முஷ்தாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே தொடரில் விளையாடி உள்ளார். கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 2 சதம் பதிவு செய்துள்ளார். அதனை இந்த சீசனிலும் அவர் தொடர வாய்ப்புள்ளது. அதே போல பஞ்சாப் அணியில் விளையாடி வரும் ஜிதேஷ் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை இந்த முறை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தையப் பகுதி: குஜராத் டைட்டன்ஸ் நம்பிக்கைகளாக தமிழ் பசங்க | ஐபிஎல் 2024 வல்லவர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT