Published : 18 Mar 2024 08:48 PM
Last Updated : 18 Mar 2024 08:48 PM
கடந்த 2022 சீசனில் அறிமுகமான இரண்டு ஐபிஎல் அணிகளில் ஒன்று குஜராத் டைட்ன்ஸ். முதல் சீசனில் சாம்பியன், அடுத்த சீசனில் இரண்டாம் இடமும் பிடித்தது. இதோ மூன்றாவது சீசனுக்கு தயாராகிவிட்டது. இந்த முறை என்ன மாதிரியான ஆச்சரியங்களை அந்த அணி நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த அணியில் சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், ஷாருக்கான், விஜய் ஷங்கர் என தமிழகத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஷாருக்கான் அந்த அணியில் புது வரவாக இணைந்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக சீசனை மிஸ் செய்கிறார். ரஷித் கான், காயத்தில் இருந்து மீண்டு களத்துக்கு திரும்புகிறார். இந்த சீசனில் அவர் எப்படியும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனின் ஆரம்பம் குஜராத் அணிக்கு சற்றே பின்னடைவாக அமைந்துள்ளது.
இருந்தும் அணியை புதிய கேப்டனான ஷூப்மன் கில் வழிநடத்த உள்ளார். ஹர்திக் விட்டு சென்ற பணியை சிறப்பாக கில் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்த சீசனில் அணிக்கு புது வடிவம் கொடுத்து கட்டமைத்துள்ளது குஜராத் நிர்வாகம். கேன் வில்லியம்சன், இந்த சீசனில் விளையாடுகிறார். அவர் கில்லுக்கு கேப்டன்சி விஷயத்தில் வழிகாட்டியாக இருக்க வாய்ப்புள்ளது.
பேட்டிங்கில் கில், சாஹா, சாய் சுதர்ஷன், வில்லியம்சன், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, மேத்யூ வேட், ஷாருக்கான், ராபின் மின்ஸ் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக விஜய் ஷங்கர், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் உள்ளனர். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஜோஷூவா லிட்டில், ஸ்பென்சர் ஜான்சன், கார்த்திக் தியாகி, நூர் அகமது, சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ் போன்ற வீரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த 4 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். எப்போதும் அணியில் உள்ள அனைவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்க குஜராத் அணி விரும்பும். அதை வைத்து பார்க்கையில் இந்த நால்வரும் இந்த சீசனில் ஆடும் லெவனில் நிச்சயம் விளையாட வாய்ப்பினை பெறுவார்கள்.
சாய் சுதர்ஷன்: இந்திய அணிக்காக விளையாடி வரும் இளம் இடது கை பேட்ஸ்மேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 507 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி 96 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறை அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப் ஆர்டரில் ஆடும் திறன் கொண்ட வீரர். கடந்த டிஎன்பிஎல் சீசனில் 371 ரன்கள் எடுத்திருந்தார்.
சாய் கிஷோர்: கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். அண்மையில் முடிந்த ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணியை சிறப்பாக வழிநடத்தினார். இந்த தொடரில் மொத்தமாக 53 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இடது கை சுழற்பந்து வீச்சாளர். கடந்த சீசனில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை.
2022 சீசனில் 5 போட்டிகளில் விளையாடி இருந்தார். மொத்தம் ஆறு விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். குஜராத் அணியின் மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, கடந்த சீசனில் விளையாடிய காரணத்தால் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை அந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கான்: குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரே வீரர் ஷாருக்கான்தான். கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.4 கோடிக்கு அவரை வாங்கியது குஜராத் அணி. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரது பவர் ஹிட்டிங் திறன் அபாரமாக இருக்கும். அதனை கணக்கில் கொண்டு அவர் வாங்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே அணியில் மில்லர், தெவாட்டியா போன்றவர்கள் இருக்கின்ற நிலையில் ஷாருக்கின் ரோல் என்னவாக இருக்கும் என கணிக்க முடியவில்லை. குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவிடமிருந்து எதிர்பார்க்காததை எதிர்பார்க்கலாம். அதனால் ஷாருக்குக்கு சரியான திட்டம் ஒன்றை இந்நேரம் அவர் வகுத்திருக்க வாய்ப்புள்ளது.
கடந்த டிஎன்பிஎல் சீசனில் ஷாருக்கின் ஸ்ட்ரைக் ரேட் 190. 17 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார். ஐபிஎல் அரங்கில் 33 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 160+ என்பது குறிப்பிடத்தக்கது. “நான் மில்லரின் ரசிகன். நெருக்கடியான தருணத்தில் களத்துக்கு வந்து போட்டிகளை வென்று கொடுக்கும் மேட்ச் வின்னர். அவரது வழியை பின்பற்ற விரும்புகிறேன். குஜராத் அணி வீரர்களை அதிகம் சப்போர்ட் செய்து வருகிறது. நான் 6 அல்லது 7-வது இடத்தில் பேட் செய்யும் வீரர். வாய்ப்பு கிடைத்தால் பந்து வீசுவேன். அதற்கு நான் 100 சதவீதம் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
விஜய் ஷங்கர்: இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வீரர். ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்வேறு அணிக்காக விளையாடி உள்ளார். குஜராத் அணிக்காக 14 இன்னிங்ஸ் ஆடி 320 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் 63 ரன்களை குவித்திருந்தார். அவரது பந்து வீச்சை குஜராத் அணி பெரிதும் பயன்படுத்தாமல் உள்ளது.
நடப்பு ரஞ்சி சீசனில் 457 ரன்கள் எடுத்திருந்தார். 1 சதம் மற்றும் 3 அரை சதம் இதில் அடங்கும். இவர்கள் நால்வரும் குஜராத் அணியின் வெற்றியில் இந்த சீசனில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT