Published : 17 Mar 2024 07:11 AM
Last Updated : 17 Mar 2024 07:11 AM

அஸ்வினுக்கு பிறகு எந்த சுழற்பந்து வீச்சாளரும் 500 விக்கெட்களை வீழ்த்த முடியாது: பிசிசிஐ முன்னாள் தலைவர் புகழாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்குகிறார் பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன். படம்:எம்.வேதன்

சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 ஆட்டங்களில் விளையாடி 516 விக்கெட்களை வீழ்த்தி உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐசிசி மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரிஸ்ரீகாந்த், சிஎஸ்கே நிர்வாகி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் என்.சீனிவாசன் பேசியதாவது: இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பிறகு எந்த சுழற்பந்து வீச்சாளரும் 500 விக்கெட்களை வீழ்த்த முடியாது. இது மிகவும் கடிமான விஷயம். 100 போட்டிகளில் 500 விக்கெட்கள் என்பது மகத்தான சாதனை. இது கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் முதலில் அணிக்கு தேர்வாக வேண்டும். அதன் பின்னர் விக்கெட்கள் வீழ்த்த வேண்டும். இதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ஒரு முறை விக்கெட் வீழ்த்த முடியாமல் போனாலும் அவ்வளவுதான். எல்லா தடைகளையும் தாண்டி அஸ்வின் சாதித்துள்ளார்.

அவர், எப்போதுமே அணியின் வெற்றிக்காக பாடுபடக் கூடியவர். கிரிக்கெட்டில் அஸ்வின் எல்லாவற்றையும் செய்துள்ளார். பேட்டிங்கிலும் சதங்கள் அடித்துள்ளார். அவரது புகழை வரலாறு சொல்லும். மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் சென்னையை சேர்ந்தவர் என்று வரலாறு கூறும். இவ்வாறு என்.சீனிவாசன் கூறினார்.

ரூ.1 கோடி ஊக்கத் தொகை விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்க தொகையை தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் என்.சீனிவாசன் வழங்கினார். முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே தங்க காசுகளால் 500 என பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசை வழங்கினார். அஸ்வினை சிறப்பிக்கும் விதமாக அவரது சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. மேலும் தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிளேஸரும் (சிறப்பு உடை), தண்டாயுதமும் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x