Published : 17 Mar 2024 07:05 AM
Last Updated : 17 Mar 2024 07:05 AM
குஜராத் டைட்டன்ஸ் அணி 2022-ம் ஆண்டு அறிமுகமான நிலையில் அந்த சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் வியக்க வைத்தது. தொடர்ந்து அடுத்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்றது. எனினும் சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த இரு சீசனினும் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், தனது ஆல்ரவுண்ட் திறனாலும் அணிக்கு பெரிய பலமாக இருந்தார்.
ஆனால் இம்முறை ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இடம் பெயர்ந்துவிட்டார். இதனால் குஜராத் அணியை இளம் அதிரடி பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் வழிநடத்த உள்ளார். இந்த சீசன் ஷுப்மன் கில், தன்னை ஒரு நம்பகமான கேப்டனாக நிரூபிக்க சிறந்த வாய்ப்பை வழங்கக்கூடும்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா வெள்ளை பந்து வடிவ கிரிக்கெட்டில் நீண்ட காலம் இருக்க மாட்டார். ரோஹித் சர்மாவுக்கு அடுத்து கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான வரிசையில் ஹர்திக் பாண்டியா முன்னணியில் உள்ளார். எனினும் குஜராத் டைட்ன்ஸ் அணியை ஷுப்மன் கில் சிறப்பாக செயல்பட வழிநடத்த முடிந்தால், தேசிய அணிக்கான கேப்டன் பதவியை பெறுவதில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஷுப்மன் கில் சவால் விடலாம். அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் நட்சத்திர பட்டாங்கள் உள்ளன.
ஷுப்மன் கில், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், மேத்யூ வேட், ராகுல் டிவாட்டியா ஆகியோர் தொடர்ச்சியாக சீரான திறனை வெளிப்படுத்தக்கூடியவர்கள். இவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர், ஷாருக்கான், சாய் சுதர்சன், சாய் கிஷோர் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடியவர்கள். கடந்த சீசனில் ஷுப்மன் கில் 890 ரன்கள் குவித்திருந்தார். அதேபோன்றதொரு செயல்திறனை தொடரச் செய்வதில் ஷுப்மன் கில் முனைப்பு காட்டக்கூடும். டேவிட் மில்லர், மேத்யூ வேட் ஆகியோர் ஒரு சில பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள்.
முந்தைய சீசன்களில் குஜராத் அணியின் வெற்றியில் பந்துவீச்சும் பிரதான பங்கைக் கொண்டிருந்தது. இம்முறை ஹர்திக் பாண்டியா இடம் பெயர்ந்துவிட்ட நிலையில் முகமது ஷமி காயம் காரணமாக தொடரில் விலகிவிட்டார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போதுதான் கிரிக்கெட் விளையாட உள்ளார்.
இதனால் அவர், உடனடியாக சிறந்த பார்மை எட்டுவது சவாலாக இருக்கும். ஜோஷ் லிட்டில், மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் அணியில் உள்ள போதிலும் இவர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவார்களா என்பது சந்தேகமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT