Published : 14 Mar 2024 03:52 PM
Last Updated : 14 Mar 2024 03:52 PM

ரஞ்சி கோப்பை: மும்பை அணி 42-வது முறையாக சாம்பியன்!

மும்பை: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களும், விதர்பா அணி 105 ரன்களும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 418 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முஷீர் கான் 136, அஜிங்க்ய ரஹானே 73, ஸ்ரேயஸ் ஐயர் 95 ரன்கள் எடுத்தனர்.

538 ரன்கள் இலக்குடன் பேட் செய்த விதர்பா அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 92 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. அதர்வா டைடே 32, துருவ் ஷோரே 28, அமன் மோகடே 32, யாஷ் ரத்தோட் 7 ரன்களில் நடையை கட்டினர். கருண் நாயர் 220 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் அக்ஷய் வத்கர் 56, ஹர்ஷ் துபே 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 290 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது விதர்பா அணி.

538 ரன்கள் இலக்கை துரத்திய விதர்பா அணி இறுதியில் 368 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மதிய உணவு இடைவேளை வரை பொறுமையாக ஆடிய விதர்பா வீரர்கள் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

கேப்டன் அக்‌ஷய் வத்கர் சதமடித்து 102 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்ஷ் துபே 67 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில், 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது விதர்பா அணி. இதன்மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி 42-வது முறையாக ரஞ்சி டிராபி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக முஷீர் கானும், தொடர் நாயகனாக தனுஷ் கோடியானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x