Published : 12 Mar 2024 10:13 AM
Last Updated : 12 Mar 2024 10:13 AM
ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸுக்குச் சென்று விட்ட ஹர்திக் பாண்டியா இல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி நன்றாகவே உள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹாக் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
பாண்டியாவின் கேப்டன்சியில் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது, ஆனால் இது பெரிய சர்ச்சைகளையும் விவாதங்களையும் கிரிக்கெட் உலகில் கிளப்பியதும் நினைவிருக்கலாம். 2023-ல் ரன்னர்களாக வந்தனர். 2023-ல் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்பது எழுதப்படாத விதி. குஜராத் தோற்றது.
இந்நிலையில் வெளியே தெரிவிக்கப்படாத மூடுமந்திர டீலில் பெரிய தொகைக்கு ஹர்திக் பாண்டியாவை குஜராத் மும்பை இந்தியன்ஸுக்கு விற்றது. இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரிய கை ஒடிந்தது போல் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை, ஏனெனில் பாண்டியாவுக்கு மாற்று அங்கு இல்லை. ஆனால் பிராட் ஹாக் யூ டியூப் சேனலில் ‘அப்படியெல்லாம் இல்லை... பாண்டியா இல்லாமல் அணி நன்றாகத்தான் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
“ஹர்திக் பாண்டியாவின் இழப்பு பெரிய இழப்பெல்லாம் ஒன்றுமில்லை. அவர் மிடில் ஆர்டரில் ஒரு தரமான ஆல்ரவுண்டர் என்பது சரிதான், ஆனால் அவர் இடத்தை நிரப்பிவிடுவார்கள். குஜராத் அணியில் நல்ல பவுலிங் உள்ளது. ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டரில் இறங்கினார், ஆனால் அவர் அந்த இடத்திற்கு சரியானவர் அல்ல. அவருக்கு அந்த ரோல் பொருத்தமாக இல்லை. எனவேதான் கூறுகிறேன் ஹர்திக் பாண்டியா இல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் நன்றாக உள்ளதென்று.
மும்பை இந்தியன்ஸ் அணி அவரைப் பின்னால் இறக்கி ஆல்ரவுண்டராகப் பயன்படுத்தும், அது அவர்களுக்குச் சரியாக இருக்கும். பின் வரிசையில் இறங்குவதுதான் பாண்டியாவுக்கு பொருந்தும். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.” என்றார்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிவதற்குக் காரணம், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ஓய்வறையில் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சருடன் சேர்ந்து பூஜை செய்தார். ஆகவே இவர் தான் கேப்டன் என்பது கிட்டத்தட்ட முடிவான விஷயமாகி விட்டது. இது ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பாதிக்குமா அல்லது மேம்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT