Published : 10 Mar 2024 07:01 PM
Last Updated : 10 Mar 2024 07:01 PM
இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு பாஸ்பால் அதிரடி காட்டிய இங்கிலாந்து, அதன்மூலம் உச்சத்துக்குச் செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசியில் அடியாழமற்ற கிடுகிடு பள்ளத்தில் உருண்ட பேருந்து போல் ஆகிவிட்டது. சுருக்கமாகச் சொன்னால் பாஸ்பால் பல்லிளித்து விட்டது. இனி அவர்கள் பாஸ்பால் என்றால் ‘எப்படி இந்தியாவில் ஆடிய பாஸ்பால் போன்றா?’ என்று மற்றவர்கள் கிண்டலடிப்பார்கள்.
முதல் டெஸ்ட் போட்டி நடந்த ஹைதராபாத்தில் ஒரு டீசண்டான பிட்ச் அமைய இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. ஜேம்ஸ் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனை எடுத்திருந்தால் இன்னும் வசதியான வெற்றியைப் பெற்றிருக்கலாம். மார்க் உட்டுக்கு பிட்ச் செட் ஆகவில்லை. ஆலி போப் 278 பந்துகளில்தான் 196 ரன்களை எடுத்தார். பாஸ்பால் அதிரடியெல்லாம் காட்டவில்லை. மாறாக ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப்களை அருமையாகப் பயன்படுத்தினார். உடனே ஆச்சாப் போச்சா, இந்தியாவில் இந்தியாவை வீழ்த்தும் கோல்டன் அணி இதுவாகவே இருக்கும் பென் ஸ்டோக்ஸ், மெக்கல்லம் பாஸ்பால் கூட்டணி இமாலய உச்சம் தொடும் என்றெல்லாம் ஆங்கிலேய ஊடகங்கள் மட்டற்ற உயர்வு நவிற்சி மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டன.
அடுத்த டெஸ்ட் விசாகப்பட்டிணத்தில். கிட்டத்தட்ட பேட்டிங் சாதகம் கொண்ட லேசான ஸ்பின் பிட்ச்தான் அங்கும் போடப்பட்டது. இதுவும் டீசண்ட் பிட்ச்தான், ஆனால் இங்கிலாந்தின் ஸ்வீப் டெக்னிக்குக்கு உரிய தீர்வுகளுடன் இந்திய அணி வரும் என்பதை ஸ்டோக்ஸும், மெக்கல்லமும் எதிர்பார்க்கவில்லை. மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேற ஒரு மூடில் ஆடி 209 ரன்களைக் குவித்தார். ஆனால் இங்கிலாந்து பாஸ்பால் போடுகிறேன் என்று 55.5 ஓவர்களில் 253 ரன்களை விரைவு கதியில் எடுத்ததே தவிர அட்டகாசமாக ரிவர்ஸ் ஸ்விங் அவுட் ஸ்விங் கலவையில் பும்ராவின் வீச்சுக்கு பதிலில்லாமல் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
குறிப்பாக ஜோ ரூட் மிகவும் திமிர்த்தனமாக பும்ராவின் பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஆடப்போய் கில்லிடம் கேட்ச் ஆனார். 123/2லிருந்து 253ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது. இரண்டாவது இன்னிங்சில் 30/2 என்ற இந்தியாவை கில்லை சதம் எடுக்கவிட்டு 255 ரன்கள் அடிக்கவிட்டது. வெற்றி இலக்கு 399 ரன்கள் என்றபோது தெனாவட்டாக நாங்கள் விரட்டி வெல்வோம் என்றெல்லாம் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறினார். ஆனால் 132/2 என்ற நிலையிலிருந்து 292 ரன்களுக்குச் சுருண்டனர். ரன் ரேட்டைப் பார்த்திங்கில்ல என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு என்ன பயன் ரிசல்ட் தோல்வி.
இதோடு இந்திய அணியின் அடுத்தடுத்த வெற்றிக்கு வித்திட்ட தோல்வியாக அமைந்தது. இதுவும் கடைசி நாள் வரை பேட்டிங் பிட்ச் ஆகத்தான் இருந்தது. எட்ஜ் பாஸ்டனில் 378 ரன்களை சேஸ் செய்தது போல் ஊதிவிடுவோம் என்றனர். ஆனால் பாஸ்பால் பல்லிளித்தது. காரணம் இது பேட்டிங் பிட்ச் என்றாலும் எட்ஜ்பாஸ்டன் போல் அஸ்வின் கிண்டலடித்த, ‘பால் பாயாச’ பிட்ச் அல்ல. பென் ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆனது, ஜோ ரூட் மீண்டும் அசிங்கமாக ஆட்டமிழந்தது என்று திமிராக ஆடித்தோற்றனர்.
ராஜ்கோட்டும் கூட மோசமான குழிப்பிட்ச் என்றே எதிர்பார்த்தோம், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக இதுவும் பேட்டிங் பிட்ச் ஆகவே இருந்தது. இதில் இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 33/3 என்ற நிலையிலிருந்து ரோஹித் சர்மா, ஜடேஜா சதங்கள் மூலம் இந்திய அணியை 445 ரன்கள் எடுக்கவிட்டனர். காரணம் சர்பராஸ் கான், துருவ் ஜுரெல், அஸ்வின் பங்களிப்புச் செய்தனர். இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 153 ரன்களை பாஸ்பால் இன்னிங்சில் 151 பந்துகளில் அடித்தாலும் மற்றவர்கள் விக்கெட்டுகளை தூக்கி எறிந்தனர். 319 ரன்களுக்குச் சுருண்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு கில்கிறிஸ்ட்டும் ஜெயசூரியாவும் கலந்த அதிரடி இரட்டைச் சதத்தை 12 சிக்சர்கள், 14 பவுண்டரி மழையில் விளாசித்தள்ள சர்பராஸ் கான் மீண்டும் ஒரு அதிரடி 68 ரன்களையும் ஷுப்மன் கில் 91 ரன்களையும் எடுக்க இந்திய அணி விரைவு கதியில் 430/4 என்று டிக்ளேர் செய்தது.
குல்தீப் யாதவ் 91 பந்துகள் அதாவது 15 ஓவர்கள் நிற்கக் கூடிய பிட்சில் இங்கிலாந்து 39 ஓவர்களில் 122 ரன்களுக்குச் சுருண்டது என்றால் அவர்களது பேட்டிங் திறன், பாஸ்பால் காமெடியாகி விட்டது என்றுதானே பொருள். 557 ரன்கள் இலக்கை விரட்டுவோம் என்றும் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்றெல்லாம் ஓவர் கான்ஃபிடன்ஸில் பேசி மண்ணை கவ்வினர். இப்போது பாஸ்பால் என்றால் எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார்கள். அதுவும் 434 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து
ராஞ்சியில்தான் உண்மையில் மோசமான பிட்ச், பந்துகள் கணுக்காலுக்குக் கீழ் சாரைப்பாம்பைப் போல் சென்றன. இங்கிலாந்து பாஸ்பால் புளிப்பை எல்லாம் மூட்டைக் கட்டி வைக்க, ஜோ ரூட் நிதானமான ஒரு சதத்தை எடுத்து 122 ரன்கள் குவிக்க 353 ரன்கள் எடுத்தது. ஆனால் அற்புதமாகப் பந்து வீசினார் ஷோயப் பசீர், 177/7 என்ற நிலையிலிருந்து துருவ் ஜுரெல் (90), குல்தீப் யாதவ் (28) என்று 76 ரன்களைச் சேர்க்கவிட்டது, குல்தீப் யாதவ்வை 131 பந்துகள் அதாவது சுமார் 22 ஓவர்கள் இவரை ஆட விட்டனர். துருவ் ஜுரெல் என்ற 2வது டெஸ்ட்டே ஆடும் விக்கெட் கீப்பரை 149 பந்துகள் அதாவது 25 ஓவர்கள் பக்கம் ஆடவிட்டனர்.
ஆனால் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து மொத்தமே 145 ரன்களையே எடுத்தது பிட்ச் ஆட முடியாத பிட்ச் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும், ஆனால் ஆட முடியாத பிட்சில் இந்திய அணியை 4வது இன்னிங்சில் 192 ரன்களை எடுக்கவிட்டனர். கடைசியில் தரம்சலாவில் முழு மட்டைப் பிட்சில், பேட்டிங் பிட்சில் 3 நாட்களுக்குள் இன்னிங்ஸ் தோல்வி தழுவி அவமானமடைந்தனர். அஸ்வின் 100வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார், ஆனால் அவருக்கு விக்கெட்டுகளை தூக்கிப் பரிசாகக் கொடுத்ததே இங்கிலாந்து தவிர அஸ்வினின் பந்து வீச்சினால் விக்கெட்டுகள் பறிக்கப்படவில்லை. அதுவும் பென் ஸ்டோக்ஸ் பவுல்டு ஆன பந்து நேர் நேர் தேமா பந்து.
ஆஸ்திரேலியா ஸ்டீவ் வாஹ் கேப்டன்சியில் உண்மையில் பெரிய அச்சுறுத்தலாக இருந்தது 16 டெஸ்ட் போட்டிகளை தொடர்ச்சியாக வென்றது. பேட்டிங் பிட்சிலும் அவர்கள் வெல்வார்கள் காரணம் மெக்ரா, ஷேன் வார்ன், கில்லஸ்பி. அது போன்ற ஒரு பவுலிங் இல்லாத இங்கிலாந்து பாஸ்பால் அதிரடி..., ‘இலக்கை இன்னும் கொஞ்சம் அதிகமாக வைத்திருக்கலாம்’ என்றெல்லாம் வாய்ச்சவடால் விடலாமா? முதலில் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆட வேண்டுமெனில் எதிரணியை மடக்க சிறந்த பவுலிங் வேண்டும்.
வயதான ஜேம்ஸ் ஆண்டர்சனையும் கட்டுப்பாடில்லாத மார்க் உட்டையும் அனில் கும்ப்ளேவை விட 10 கிமீ வேகம் அதிகம் வீசும் ஆலி ராபின்சனையெல்லாம் வைத்துக் கொண்டு பேஸ்பால் பூஸ்பால் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டியது பெரிய காமெடியாக முடிந்ததுதான் இங்கிலாந்தின் புதிய துவக்கத்திற்கு விழுந்த பேரடி. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஆட வேண்டும். புத்திசாலித்தனமாக ஆட வேண்டும். பீல்டிங்கை பரவலாக்கி விடுமாறு அடிப்பதும் பரலாக்கிய பிறகு விக்கெட்டை கொடுக்காமல் பெரிய ஸ்கோரை எடுப்பதும் பிறகு நல்ல அச்சுறுத்தல் பந்து வீச்சில் எதிரணியை வீழ்த்துவதும்தான் நல்ல கிரிக்கெட்.
இதைத்தான் 70களின் 80களின் மே.இ.தீவுகளும் 92-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமும் அபாயகரமான, கிரேட் பந்து வீச்சின் பின்னணியில் அதிரடி பேட்டிங் என்ற உத்தியைக் கடைப்பிடித்தனர். இங்கிலாந்து அணிக்கு உண்மையில் அப்படிப்பட்ட அடித்தளம் இல்லை. அதனால்தான் ஆஷஸ் தொடரில் திக்கித் திணறி ட்ரா செய்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட்டில் மிகப்பெரிய உதை வாங்கினர். நியூஸிலாந்தும் இங்கிலாந்தை என்ன சேதி என்று கேட்டது. ஆகவே இங்கிலாந்து அணி இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் துணைக்கண்டம் உட்பட அனைத்து நாடுகளிலும் அச்சுறுத்தும் ஒரு பந்து வீச்சுக் கூட்டணியை முதலில் உருவாக்கி விட்டு பாஸ்பால் பூச்சண்டி காட்டினால் உண்மையில் எஃபெக்டிவ் ஆக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT