Published : 14 Feb 2018 01:52 AM
Last Updated : 14 Feb 2018 01:52 AM
போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை 4-1 என்று கைப்பற்றி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 42.2 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சதமெடுத்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன்
மீண்டும் குல்தீப் யாதவ் (4/57), சாஹல் (2/43) ஆகியோரிடம் 100 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தென் ஆப்பிரிக்கா தோல்வி கண்டது. மேலும் இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா இழந்த 43 விக்கெட்டுகளில் 30 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ், சாஹல் ஜோடி கைப்பற்றியுள்ளது என்றால் தென் ஆப்பிரிக்காவின் ஸ்பின் பலவீனம் என்னவென்பது புரிகிறது.
166 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று 35வது ஓவரில் இருந்த தென் ஆப்பிரிக்கா 43 ஓவர்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்க அணியில் ஹஷிம் ஆம்லா அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்து பாண்டியாவின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆக அது திருப்பு முனையாக அமைந்தது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ஹர்திக் பாண்டியா இன்று பவுலிங்கில் முக்கிய விக்கெட்டான அபாய வீரர் டிவில்லியர்ஸ் மற்றும் ‘டுமீல்’ டுமினியையும் அடுத்தடுத்து வீழ்த்தி முதற்கட்ட திருப்பு முனையை ஏற்படுத்தினார். 2 விக்கெட்டுகள், ஒரு ரன் அவுட், ஒரு கேட்ச் என்று பாண்டியா இன்று அசத்தினார்.
ஆனால் அவர் எடுத்த விக்கெட்டுகளுக்கான இரண்டுபந்துகளுமே விக்கெட் எடுக்கத் தகுதியுடைய பந்துகள் அல்ல, சாஃப்ட் டிஸ்மிசல் என்பார்களே அதுதான் இரண்டும், டிவில்லியர்ஸ் ஸ்விங் ஆகாத ‘நேர் நேர் தேமா’ பந்தை எப்படி எட்ஜ் செய்தார் என்பது புரியாத புதிர். டுமினிக்கு கோலி தேர்ட்மேனில் சிங்கிள் போகாமல் இருப்பதற்காக வைடு ஸ்லிப் ஒன்றைக் கொண்டு வர டுமினியும் பாண்டியாவின் விக்கெட் பெற தகுதியில்லாத பந்தைக் குறிபார்த்து அந்த ஒரே பீல்டரிடம் பின்னால் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுக்கும் அணி வெற்றி பெறத் தகுதியில்லாத அணியாகும். இவரையெல்லாம் இறங்கி நாலு சாத்து சாத்தினால் அதன் பிறகு அவருக்கு கை வராது, ஆனால் அவர் வீசிய ஒன்றுமில்லாத பந்துக்கு விக்கெட்டுகளை கொடுப்பது அராஜகம். பும்ராவுக்கு விக்கெட் கொடுத்திருந்தால் அதில் அர்த்தமுண்டு. ஆனால் தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரமே 32 ரன்களில் பும்ராவின் கோணத்தைப் பயன்படுத்தி மிட்விக்கெட்டின் மேல் சிப் ஷாட் ஆட முனைந்தா, ஆனால் பந்து சரியாக மட்டையில் சிக்கவில்லை கோலியிடம் கேட்ச் ஆனது. இதுவும் ஒரு சாஃப்ட் டிஸ்மிசல்தான்.
ஆனால் இவர் 9 ரன்களில் இருந்த போது பும்ரா பந்தை பின்னால் சென்று கவர் திசையில் அடித்தார், தரையில் இல்லை, தூக்கித்தான் அடித்தார், நேராக எக்ஸ்ட்ரா கவரில் ஷ்ரேயஸ் ஐயருக்கு கேட்ச் பிடிக்கும் உயரத்தில் சென்றது, ஆனால் அவரோ கையை வைத்து பந்து பட்டு விடக்கூடாது என்பது போல் ஏடாகூடமாக கையைக் கொண்டு போய் கடைசியில் தொப்பென்று தரையில் விட்டார். கடந்த போட்டியில் மில்லருக்கு கேட்ச் விட்டு போட்டியை இழக்கச் செய்தார் இன்று மார்க்ரமுக்கு கேட்சை விட்டார், உடனேயே புவனேஷ்வர் குமார் ஓவரில் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியும் மிக அருமையாக ஸ்கொயர்லெக் மேல் ஒரு அபாரமான சிக்ஸும் அடித்தார் மார்கரம். மீண்டும் குமார் ஓவரிலேயே மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரியும் அதே ஓவரில் கவர் பாயிண்டில் காது செவிடாகும் சத்தத்துடன் இன்னொரு அரக்க ஷாட்டையும் அடித்து பவுண்டரி விளாசினார். 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் தன்னம்பிக்கையுடன் ஆடி வந்த நிலையில்தான் பும்ரா பந்தில் சாஃப்ட் ஆன கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
டுமினி களமிறங்கி பும்ராவின் உள்ளே வந்த பந்தை எட்ஜ் செய்ய அது தோனிக்குச் சற்று முன் விழுந்தது. இந்நிலையில் 11 வது ஓவரை பாண்டியா வீச வர, 5வது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி மேலும் வெளியே சென்றது, பந்தை ஒன்று ஆடாமல் விட்டிருக்க வேண்டும், அல்லது ஒரு காட்டு சுத்து சுத்தியிருக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் மட்டையை அதனிடம் கொண்டு செல்ல எட்ஜ் ஆகி ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது, டுமினி 1 ரன்.
டிவில்லியர்ஸ் இறங்கி 6 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கையில் ஒன்றுமில்லாத பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நேராகச் சென்றது ஸ்விங்கும் இல்லை ஒன்றுமில்லை. உடலுக்கு தள்ளி மட்டையைக் கொண்டு சென்று ஸ்லாஷ் செய்தார் டிவில்லியர்ஸ் எட்ஜ் ஆனது தோனி பிடித்தார், இதுதான் திருப்பு முனையை ஏற்படுத்தியது. டிவில்லியர்ஸ் போன்ற ஒரு வீரர் இப்படி பாண்டியா ‘ரக’ பவுலர்களிடம் அவுட் ஆனால் என்ன செய்ய முடியும்? இங்குதான் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை கவனிக்கத்தக்கது, டிவில்லியர்ஸ் ஆக இருந்தாலும் பாண்டிங்காக இருந்தாலும் பாண்டியாவிடம் அவுட் ஆனால் அடுத்த போட்டியில் இருக்க மாட்டாய் என்பதைத் தெளிவாகக் கூறிவிடுவார்கள்.
மில்லர் இறங்கி 2 பவுண்டரிகள் அடித்து 13 ரன்களில் இருந்த போது சாஹல் பந்து ஒன்று திரும்பி கால்காப்பைத் தாக்க பெரிய எல்.பிமுறையீடு நடுவர் நாட் அவுட் என்க கோலி ரிவியூ செய்தார், அதிலும் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது, இதனால் நாட் அவுட். அதன் பிறகு சாஹலை நேராக ஒரு சிக்ஸ் அடித்தார்.
அந்த 7 ஓவர்கள்!
19 ஓவர்கள் முடிவில் 95/3 என்ற நிலையில் ஆம்லா 28 ரன்களுடனும், மில்லர் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த சிக்சருக்குப் பிறகு குல்தீப் யாதவ், சாஹல் இருவரும் டைட்டாக வீசினர் பவுண்டரிகளே வரவில்லை. ரன் விகிதம் குறையத் தொடங்கியது ஆம்லா 38 ரன்களில் இருந்த போது பாண்டியாவின் பந்தை கட் ஷாட் ஆடினார் ஷார்ட் பாயிண்டில் நேராக ரஹானேவிடம் சென்றது, அவர் சிங்கிளைத் தடுக்க அருகில் இருந்ததால் கேட்சை எடுக்கமுடியவில்லை. ஆகவே 19 ஓவர்களில் 95/3 என்பதிலிருந்து 26வது ஓவர் முடிவில் ஸ்கோர் 122/3 என்றுதான் உயர்ந்தது. பவுண்டரிகளே வரவில்லை, அதாவது 7 ஓவர்களில் வெறும் 27 ரன்களே வந்தது. அழுத்தம் எகிற அடுத்த சாஹல் ஓவரில் ஆம்லா ஸ்வீப் பவுண்டரி அடித்து 7 ஓவர்களுக்குப் பிறகு ’இந்தா’ பவுண்டரி என்றார்.
வெற்றி பெறத் தேவையான ரன் விகிதம் ஓவருக்கு 6.37 என்றுதான் உள்ளது, கூட்டணியை பில்ட் அப் செய்வதை விடுத்து மில்லர் 36 ரன்களில் இருந்த போது மிகவும் மெதுவாக வந்த பந்தை மேலேறி வந்து அடிக்கப் பார்த்தார், பந்தை விட்டு விட்டார் பவுல்டு ஆனது. சாஹல், குல்தீப் மெதுவாக தூக்கி வீசுகின்றனர் என்று புரிவதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ தெரியவில்லை, பந்து வந்தவுடன் வெளுப்பதை விட்டு விட்டு அவசரப்பட்டு ஆடினால் மில்லர் போல்தான் பவுல்டு ஆக வேண்டி வரும்.
அதன் பிறகு ஆம்லா, சாஹலின் பந்தை ஸ்வீப் ஆடமுயன்று கால்காப்பில் வாங்கினார் அதற்கு ஏன் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார் என்பது புதிர். கோலி நடுவரிடம் வாதிட்டது சரியென்று தோன்றுகிறது. அதன் பிறகு ஆம்லா 72 பந்துகளில் அரைசதம் எடுத்தார். சாஹலை கிளாசன் ஸ்வீப் பவுண்டரி அடிக்க 31வது ஓவரில் 9 ரன்கள் வந்தது, தென் ஆப்பிரிக்கா 148/4, வெற்றி பெற ரன் விகிதம் 6.68.
பிறகு புவனேஷ்வர், பும்ரா ஆகியோரை இரண்டு அற்புத பவுண்டரிகள் அடித்த ஆம்லா 92 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்திருந்தா, கிளாசன் 12 ரன்களில் இருந்தார். அப்போது தான்...
திருப்புமுனை பாண்டியா த்ரோ: ஆம்லா ரன் அவுட்:
ஆட்டத்தின் 35வது ஓவரின் 3வது பந்தை புவனேஷ்வர் குமார் வீச பின் காலில் சென்று மிட் ஆஃபில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க வேகமாக ஓடினார், பாண்டியாவின் நேர் த்ரோ ஸ்டம்புகளைப் பெயர்க்க ஏகப்பட்ட ரீப்ளேக்களுக்குப் பிறகு ஆம்லா மட்டையின் எந்த ஒரு பாகமும் கிரீஸிற்குள் இல்லை என்பதை உறுதியானது, ஆம்லா ரன் அவுட்.
167/5 என்ற நிலையிலிருந்து சரிவு தொடங்கியது பெலுக்வயோ ரன் எடுக்காமல் குல்தீப் பந்துக்கு மட்டையையும் காலையும் ஒன்றாகக்கொண்டு செல்லாமல் வீக் டிபன்ஸ் ஆட பந்து உள்ளே புகுந்து பவுல்டு ஆனது, மீண்டும் மிகமிக மெதுவாக வீசப்பட்ட பந்து.
கிளாசன் பிறகு முடிவுடன் ஆடி குல்தீப் யாதவ்வின் ஒரே ஓவரில் 16 ரன்கள் விளாசினார் இதில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடங்கும், ஒன்று இறங்கி வந்து நேராக அடித்த சிக்ஸ், மற்றொன்று ஸ்டன்னிங் ஷாட், பின்னால் சென்று மெதுவாக தாழ்வாக வந்த பந்தை நேராக அடித்த ஒரு அரிய சிக்ஸ். அதன் பிறகு ரன்கள் வரவில்லை.
ரபாடா மீண்டும் ஒரு மிக மெதுவான பந்தை லெக் திசையில் அடிக்க முனைந்து அருகிலேயே மிட்விக்கெட்டில் சாஹலிடம் கேட்ச் ஆனார். கிளாசன் இனி நின்று ஆடி என்ன பயன் என்று மேலேறி வந்து குல்தீப்பிடம் ஸ்டம்ப்டு ஆனார், ஷம்சி, வந்தவுடன் தூக்கி அடித்து பாண்டியாவிடம் வெளியேறினர், ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குல்தீப். கடைசி விக்கெட்டான மோர்கெலை சாஹல் எல்.பியாக்கினார், தென் ஆப்பிரிக்கா 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தென் ஆப்பிரிக்காவில் தொடரை வென்று வரலாறு படைத்தது.
ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT