Published : 09 Mar 2024 06:03 AM
Last Updated : 09 Mar 2024 06:03 AM
தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 473 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர்.
தரம்சாலாவில் நடைபெற்று வரும் இந்தடெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸாக் கிராவ்லி 79 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5, ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்களும், ஷுப்மன் கில் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் இங்கிலாந்து பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்கள். ஷோயிப் பஷிர் வீசிய 49-வது ஓவரின் முதல்பந்தை ஷுப்மன் கில் சிக்ஸருக்கு பறக்கவிட இந்திய அணி 218 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது. ரோஹித் சர்மா 154 பந்துகளில், 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் தனது 12-வது சதத்தை விளாசினார்.
அதேவேளையில் ஷுப்மன் கில் 137 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 4-வது சதமாக அமைந்தது. 2-வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பென் ஸ்டோக்ஸ் பிரித்தார். ரோஹித் சர்மா 162 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார். அடுத்த ஓவரிலேயே ஷுப்மன் கில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். ஷுப்மன் கில் 150 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் சேர்த்தார்.
இதன் பின்னர் அறிமுக வீரரான தேவ்தத் படிக்கலுடன் இணைந்த சர்பிராஸ் கான் அதிரடியாக விளையாடினார். தனது 3-வது அரை சதத்தை கடந்த சர்பிராஸ் கான் 60 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் சிலிப் திசையில் நின்ற ஜோ ரூட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்தது. ஷோயிப் பஷிர் வீசிய 87-வது ஓவரின் முதல் பந்தை தேவ்தத் படிக்கல் சிக்ஸருக்கு விளாசி தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் 103 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சேர்த்த நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் போல்டானார். இதன் பின்னர் துருவ் ஜூரெல் 15, ரவீந்திர ஜடேஜார 15, ரவிச்சந்திரன் அஸ்வின் 0 ரன்களில் வெளியேறினர்.
இந்த 4 விக்கெட்களையும் 25 ரன்கள் இடைவேளையில் இந்திய அணிபறிகொடுத்து இருந்தது. 428 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்களை இழந்த நிலையில் எஞ்சிய 2 விக்கெட்களையும் விரைவாக இழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா ஜோடி அற்புதமாக விளையாடி 18 ஓவர்கள் களத்தில் நின்று 45 ரன்கள் சேர்த்ததுடன் மேற்கொண்டு விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டனர். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 120 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 473 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் 55 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் ஜஸ்பிரீத் பும்ரா 55 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயிப் பஷிர் 4, டாம் ஹார்ட்லி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 2 விக்கெட்கள் இருக்க 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணிஇன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
திராவிட்டை சமன் செய்த ரோஹித்: தரம்சாலா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசினார். அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சர்வதேச அளவில் ரோஹித் சர்மாவின் 48-வது சதம் இதுவாகும். இதன் மூலம் இந்த வகை சாதனையில் 3-வது இடத்தை ராகுல் திராவிட்டுன் பகிர்ந்து கொண்டுள்ளார் ரோஹித் சர்மா. சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 80 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT