Published : 07 Mar 2024 04:12 PM
Last Updated : 07 Mar 2024 04:12 PM
தரம்சலா: தரம்சலாவில் இன்று தொடங்கிய இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து தன் சொந்த செலவில் தனக்கே சூனியம் வைத்துக் கொண்டு 60 ஓவர்கள் கூடத் தாங்காமல் 218 ரன்களுக்குச் சுருண்டது.
குல்தீப் யாதவ் தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இதே மைதானத்தில் மீண்டும் ஒரு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் மற்றும் 2வது டெஸ்ட் ஸ்பின்னர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்பாக இங்கிலாந்தின் ஜானி பிரிக்ஸ் குல்தீப்பை விடவும் விரைவாக முதல் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையை வைத்துள்ளார்.
இன்றைய போட்டியில் அஸ்வினின் பந்துகள் பெரும்பாலும் அதிகம் திரும்பவில்லை. அவர் வலது கை பேட்டருக்குக் கூட பெரும்பாலும் ரவுண்ட் த விக்கெட்டிலேயே வீசினர். இதன் தாத்பரியம் என்னவெனில் ஓவர் தி விக்கெட்டில் நேதன் லயனுக்கு டர்ன் ஆவது போல் அஸ்வினுக்கு எந்த நாளிலும் டர்ன் ஆனதில்லை என்பதே.
ஆகவே இந்திய பிட்ச்களில் பந்துகள் தாழ்வாக வரும் பிட்ச்களில் ரவுண்ட் தி விக்கெட்டில் வீசும் போது திரும்பாத பந்துகள் திரும்பும் என்று பேட்டர்கள் நினைத்து தவறிழைத்து எல்பிடபிள்யு ஆகின்றனர். டிஆர்எஸ்., நடுவர் தீர்ப்பு, கால்காப்பை நோக்கிய நேர் பந்துகளில்தான் அஸ்வின் விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். அப்படி இல்லையெனில் பேட்டர்கள் தவறு செய்யும் போது விக்கெட் அவருக்கு விழுகிறது. அதாவது பேட்டர்கள் அவருக்கு விக்கெட்டை கொடுக்கின்றனர். இன்று அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அனைத்தும் டெய்ல் எண்டர்களின் விக்கெட்டுகள்.
ஆனால் இது அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் இங்கிலாந்து ஆல் அவுட் ஆனவுடன் பெவிலியன் நோக்கி வந்த போது குல்தீப் யாதவும் சிராஜும் அஸ்வின் அணியை வழிநடத்தி பெவிலியன் இட்டுச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி அவர் கையில் பந்தைக் கொடுக்க அஸ்வினோ அதை ஏற்க மறுத்து குல்தீப்தான் அணியை வழிநடத்தி பெவிலியன் அழைத்துச் செல்ல தகுதியானவர் என்று அவரிடம் பந்தைக் கொடுத்து அழகு பார்த்தார். ஆனால், குல்தீப் இதை ஒரு மாதிரி அரை மனதுடன் ஏற்று அணியை வழிநடத்திச் சென்றார். சிகப்புப் பந்தை ரசிகர்களிடம் தூக்கிக் காட்டிய படி முன்னிலையில் சென்றார். இது அஸ்வினின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
தான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் 100வது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் எப்போதோ இந்திய அணிக்கு கேப்டனாகியிருக்க வேண்டியவர் என்றாலும் தான் வழிநடத்துவது சரியாக இருக்காது, குல்தீப் யாதவ் இன்று அருமையாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 50 டெஸ்ட் விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றிய சாதனையையும் நிகழ்த்தியதால் அவரே வழிநடத்தத் தகுதியானவர் என்று கூறி அவரிடம் பந்தைக் கொடுத்தார் அஸ்வின். இது குல்தீப் யாதவ் நெகிழ்ச்சியடையும் தருணமாக அமைந்தது.
தரம்சலா பிட்ச்சில் காலையில் ஸ்விங் எடுபட்டது. பும்ரா, சிராஜ் நன்றாகவே வீசினர். பந்து பழசானவுடன் ஸ்பின்னர்களுக்கு விரைவு கதியில் திரும்பியது. இங்கிலாந்து 60 ஓவர்கள் தாங்கவில்லை. வழக்கம் போல் இங்கிலாந்து மோசமாக ஆடி 175/3 என்ற நிலையிலிருந்து முடிவில் 218 ரன்களுக்குச் சுருண்டது.
What a lovely scene...#INDvENG #INDvsENG#Ashwin #kuldeepyadav pic.twitter.com/PVikZfSLOZ
— Sahil (@Vijayfans45) March 7, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT