Published : 06 Mar 2024 07:32 AM
Last Updated : 06 Mar 2024 07:32 AM
தரம்சாலா: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்குகின்றனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நாளை (7-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டியானது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்று ஒரே நேரத்தில் இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2000-ம் ஆண்டு ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் மைக்கேல் ஆதர்டன், அலெக் ஸ்டீவர்ட் ஆகியோர் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தனர்.
இதன் பின்னர் 2006-ம் ஆண்டு செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், ஷான் பொல்லாக் மற்றும் நியூஸிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் தங்களது 100-வது போட்டியில் களமிறங்கியிருந்தனர். தொடர்ந்து 2013-ம் ஆண்டு பெர்த் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் அலாஸ்டர் குக், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் ஆகியோர் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்கள். இந்த வகையில் தற்போது அஸ்வின், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தங்களது 100-வது டெஸ்டில் களமிறங்க உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க நியூஸிலாந்து வீரர்களான டிம் சவுதி, கேன் வில்லியம்சன் ஆகியோர் தங்களது 100-வது டெஸ்டில் களமிறங்க உள்ளனர். ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 8-ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்குகிறது. இந்த ஆட்டம் நியூஸிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு 100-வதுசர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
‘2012-ம் ஆண்டு தொடர் திருப்புமுனை’: 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்போது, “2012-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்தான் எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த தொடரை நாங்கள் 1-2 என இழந்தோம். எனது ஆட்டத்தில் எதை சரிசெய்ய வேண்டும் என்பதை அந்த தொடர் எனக்குக் கற்றுக் கொடுத்தது.
100-வது டெஸ்ட் போட்டி என்பது பெரிய விஷயம். இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. 100-வது போட்டி என்பதற்காக இந்த போட்டிக்காக சிறப்பாக எதுவும் தயாராகவில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான பந்து வீச்சு என்றால் 2018-19-ம் ஆண்டு பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியை கூறுவேன்” என்றார்.
2018-19-ம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். முக்கியமான ரன் இயந்திரமாக திகழ்ந்த அலாஸ்டர் குக், ஜோ ரூட் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.
37 வயதான அஸ்வின், சமீபத்தில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 507 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அதேவேளையில் பேட்டிங்கில் 3,309 ரன்களையும் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 14 அரை சதங்கள் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT