Published : 06 Mar 2024 12:47 AM
Last Updated : 06 Mar 2024 12:47 AM

100-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் அஸ்வினை புகழ்ந்த புஜாரா!

அகமதாபாத்: நாளை நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தன்னால் மறக்க முடியாத அஸ்வினின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் இந்திய வீரர் புஜாரா.

தரம்சாலா போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைக்க உள்ளார். அண்மையில் 500 விக்கெட் சாதனையை படைத்திருந்தார். இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய பந்து வீச்சாளர்களில் 4 பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர். அந்த பட்டியலில் 5-வது வீரராக அஸ்வின் இணைகிறார். மேலும், இந்த சாதனையை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் படைக்கும் 6-வது சுழற்பந்து வீச்சாளர், 4-வது ஆஃப் ஸ்பின்னராகவும் அஸ்வின் அறியப்படுவார்.

“அஸ்வின் உடனான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் தருணங்கள் நிறைய உள்ளன. அதில் பெங்களூரு (2017), அடிலெய்ட் (2018), சிட்னி (2021) போன்றவை நிச்சயம் இருக்கும். இந்த மூன்றுமே ஆஸ்திரேலிய அணிக்காக நாங்கள் விளையாடியவை. இதில் ரொம்ப ஸ்பெஷல் என்றால் பெங்களூரு போட்டி தான். அந்த தொடரில் 1-0 என நாங்கள் பின்தங்கி இருந்தோம். தொடரின் இரண்டாவது போட்டியாக பெங்களூரு ஆட்டம் அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தோம். அதில் 8 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் ஆஸி வீரர் நேதன் லயன். இரண்டாவது இன்னிங்ஸில் நிலையாக ஆடி இருந்தோம். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸி விரட்டியது.

அணியின் முன்னணி பந்துவீச்சாளரான அஸ்வின், ஆஸியை கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். அந்த அழுத்தத்தை சிறப்பாக கையாண்டு, 6 விக்கெட்களை கைப்பற்றினார். அதன் மூலம் 75 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் அதுவே என்னை பொறுத்தவரையில் அவரது சிறந்த இன்னிங்ஸ்” என புஜாரா தெரிவித்தார்.

அஸ்வின் மற்றும் புஜாரா என இருவரும் இணைந்து இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடி உள்ளனர். கடந்த ஆண்டு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்திய வீரராக புஜாரா சாதனை படைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x