Published : 05 Mar 2024 08:06 PM
Last Updated : 05 Mar 2024 08:06 PM
ஐபிஎல் 2024 சீசனை பெரிய அளவிலான மாற்றங்களுடன் எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக நம்பிக்கை அளித்து வருகிறார் இளம் வீரர் திலக் வர்மா. இந்த இரண்டு சீசன்களிலும் 340+ ரன்களை அவர் எடுத்துள்ளார். இப்போது இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராகவும் வலம் வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ்: குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் மும்பை அணிகக்க விளையாட உள்ளார். மும்பை அணி அவரது தாய் வீடு. அவருக்கு இந்த முறை அணியை வழிநடத்தி செல்லும் கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, எப்படி புதிய ரோலில் தன்னை ஃபிக்ஸ் செய்து கொள்ள உள்ளார் என்பதும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா, இந்த சீசனில் விளையாட உள்ளார். அவருக்கு உறுதுணையாக பெர்ஹாண்டாஃப், ஜெரால்ட் கோட்ஸி, மதுஷங்கா ஆகியோர் அணியில் உள்ளனர்.
பேட்டிங்கில் ரோகித், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நேஹல் வதேரா ஆகியோர் உள்ளனர். இவர்களோடு ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, டெவால்ட் பிரேவிஸ், டிம் டேவிட் ஆகியோரும் அணியில் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் இளம் வீரர்களின் கலவையாக கட்டமைக்கப்பட்டுள்ளது மும்பை அணி
திலக் வர்மா: 21 வயதான திலக் வர்மாவுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் இது 3-வது சீசன். கடந்த 2022-ல் நடைபெற்ற ஏலத்தில் அவரை மும்பை அணி வாங்கியது. ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப பேட் செய்யும் திறன் கொண்ட வீரர். அதிரடியாக ஆடி ரன் குவிப்பதிலும், தட்டி ஆடி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதிலும் வல்லவர். ஐபிஎல் அரங்கில் அவர் ஆடிய 2-வது இன்னிங்ஸிலேயே தனது வருகையை உரக்க சொல்லி இருந்தார்.
உள்ளூர் கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் வரையில் தொடர்ச்சியாக ரன் குவித்தும் வருகிறார். அவர் கடைசியாக விளையாடியுள்ள 12 இன்னிங்ஸில் 3 அரைசதம் மற்றும் 3 சதம் பதிவு செய்துள்ளார். அதுவே அவரது ஆட்டத்திறனுக்கு சான்று. உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆடிய இன்னிங்ஸ்கள் இதில் அடங்கும். இதில் ஓர் அரைசதம் தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக பதிவு செய்தது.
இந்தியா, ஹைதராபாத் மற்றும் இந்தியா-ஏ அணி என இந்த 12 இன்னிங்ஸ்களை அவர் ஆடி இருந்தார். இதுவரை 4 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். பகுதி நேரமாக சுழற்பந்தும் வீசுவார்.
“என்னிடமிருந்து மும்பை அணி நிர்வாகம் எதிர்பார்ப்பதை நான் செவ்வனே செய்து வருகிறேன். கன்சிஸ்டன்ஸி உடன் ஆடுவதில் எனது கவனம் உள்ளது. மேட்ச் வின்னிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்க விரும்புகிறேன். இந்த சீசனில் எனக்கு எந்த ரோல் கொடுத்தாலும், அதை ஏற்றுக் கொள்வேன். எனது ஆட்டத்தில் நான் பெரிய மாற்றங்களை செய்யவில்லை.
அணியின் சீனியர் வீரர்கள் மற்றும் பிற அணி வீரர்களின் அனுபவம் என்னை பக்குவமடைய செய்துள்ளது. எனக்காக எனது பெற்றோர் நிறைய நேரம் செலவிட்டு உள்ளனர். எனது பயிற்சியாளர் சலாம் சார் எனக்காக எப்போதும் என்னுடன் பக்க பலமாக உள்ளார். அவருடனே எனது கேரியரின் இறுதி அத்தியாயம் வரை பயணிக்க விரும்புகிறேன். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக சிறப்பாக செயல்பட ஐபிஎல் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன்” என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக கடந்த 2020-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த முறை அந்த அணி பட்டம் வெல்ல திலக் வர்மாவின் ஆட்டம் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT