Published : 05 Mar 2024 07:30 AM
Last Updated : 05 Mar 2024 07:30 AM
வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரருமான டேவன் கான்வே கட்டை விரலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இதனால் அவர், வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை உருவாகிஉள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான டேவன் கான்வேக்கு கடந்தமாதம் 23-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியின் போது இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் டேவன் கான்வே கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு டேவன் கான்வேக்கு அறுவை சிகிச்சை செய்யக்கோரி மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தவாரம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளமுடிவு செய்துள்ளார் டேவன் கான்வே. சிகிச்சைமுடிந்து மீண்டும் முழு உடற்தகுதியை எட்டுவதற்கு 8வாரங்கள் ஆகும் என கருதப்படுகிறது. இதனால் வரும்22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் டேவன் கான்வே பங்கேற்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரூ.1 கோடிக்கு டேவன் கான்வேவை ஏலம் எடுத்திருந்தது. இடது கை பேட்ஸ்மேனாக டேவன் கான்வே இதுவரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 23 ஆட்டங்களில் விளையாடி 46.12 சராசரி மற்றும் 141.28 ஸ்டிரைக்ரேட்டுடன் 924 ரன்கள் சேர்த்துள்ளார்.
வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல் 17-வது சீசன் போட்டிகள் தொடங்க இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் டேவன் கான்வே காயத்தில் சிக்கி உள்ளது சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT