Published : 04 Mar 2024 01:53 PM
Last Updated : 04 Mar 2024 01:53 PM

IPL | சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் பாட் கமின்ஸ் - சாதிக்குமா பழைய காம்போ?

ஹைதராபாத்: துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.20.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கமின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் 2024 தொடருக்கு கேப்டனாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னால் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பாட் கமின்ஸ் முதல் முறையாக ஐபிஎல் அணி ஒன்றிற்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியுடன் பாட் கமின்ஸ் கேப்டனாகப் பணியாற்றவிருக்கிறார். டேனியல் வெட்டோரி ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு உதவிப் பயிற்சியாளராக இருந்திருப்பதால் வெட்டோரி-கமின்ஸ் ஜோடி ஐபிஎல் 2024 தொடரில் பெரிய அளவில் சோபிக்கும் என்று சன்ரைசர்ஸ் நிர்வாகம் நம்புகிறது.

கமின்ஸ் கேப்டன்சி நியமனத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன் சமூக ஊடகப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. துபாயில் நடந்த ஏலத்தில் கமின்ஸ் அதிகபட்சத் தொகையான ரூ.20.5 கோடிக்கு ஏலம் எடுக்கபப்ட்டார். மேலும் ஹைதராபாத் அணிக்கு இவரது சகா டேவிட் வார்னர் 2015 முதல் 2021 வரை 67 போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். இப்போது சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்தும் இரண்டாவது ஆஸ்திரேலியர் ஆனார் கமின்ஸ்.

கமின்ஸ் இது வரை ஐபிஎல் தொடர்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் ஆடியுள்ளார். பாட் கமின்ஸ் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2023 50 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடரிலும் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளார்.

கடந்த 2 சீசன்களில் சன்ரைசர்ஸ் கேப்டனாகப் பணியாற்றிய எய்டன் மார்க்ரம் கேப்டன்சியில் அணிக்கு போதிய வெற்றிகள் கிட்டவில்லை. ஆனால் இதே எய்டன் மார்க்ரம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தென் ஆப்பிரிக்க டி20 லீக் அணியான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என்ற அணிக்கு தலைமை தாங்கி முதல் 2 சீசன்களில் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே எய்டன் மார்க்ரம் தூக்கப்பட்டது ஒருவிதத்தில் ஆச்சரியமாக இருந்தாலும் கமின்ஸின் திறமை பல்வேறு கோணங்களில் சிறப்பானது என்பதையும் மறுக்க முடியாததே.

2016ம் ஆண்டு ஐபிஎல் சாம்பியனான சன்ரைசர்ஸ் இந்த சீசனில் மார்ச் 23ம் தேதியன்று கேகேஆர் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி ஈடன் கார்டன்ஸில் நடைபெறுகிறது. பிறகு மார்ச் 27ம் தேதி அடுத்தப் போட்டியில் 5 முறை சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை ஹைதராபாத்தில் சந்திக்கிறது. முதல் இரண்டு போட்டிகளுமே பாட் கமின்ஸுக்குக் கடும் சவால்தான். வார்னருக்குப் பிறகு சன்ரைசர்ஸ் கேன் வில்லிய்ம்சன் தலைமையில் பிளே ஆஃப் சுற்று வரை வந்தது. ஆனால் நடுவர்களின் அபத்தமான தீர்ப்புகளினாலும் ஐபிஎல் ஆட்டத்திற்கேயுரிய ‘தர்க்கங்களினாலும்’ சன்ரைசர்ஸ் கோப்பைக்கு அருகில் வர முடியவில்லை. இந்தத் தடைகளைக் கடந்து பாட் கமின்ஸ் ஜொலிக்கிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x