Last Updated : 12 Feb, 2018 06:46 PM

 

Published : 12 Feb 2018 06:46 PM
Last Updated : 12 Feb 2018 06:46 PM

தோனி உறுதியளித்து விட்டார்; இனி பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துவேன்: ‘சத’ ஜடேஜா உறுதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பேட்டிங் வாய்ப்புகளை அதிகம் வழங்குவேன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி உறுதியளித்தது ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்கில் சதம் மூலம் எதிரொலித்துள்ளது.

நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா 116 பந்துகளில் 113 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக நிற்க 330 ரன்கள் இலக்கை சவுராஷ்டிரா அணி விரட்டி வெற்றி பெற்றது. இந்த 113 ரன்களில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும்.

இது ஜடேஜாவின் 2-வது லிஸ்ட் ஏ சதமாகும். 4-ம் நிலையில் இறங்கி பேட்டிங் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார் ஜடேஜா.

இது குறித்து தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸில் ஜடேஜா கூறியதாவது:

மாஹி பாய் (தோனி) என்னிடம் வரும் ஐபிஎல் தொடரில் எனக்கு பேட்டிங் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று கூறினார். மேலும் ஒரு முறையான பேட்ஸ்மெனுக்கான திறமை என்னிடம் இருப்பதாகவும், எப்போதாவது ஒளிரும் பேட்ஸ்மென் அல்ல என்றும் தோனி தெரிவித்தார்.

ஆகவே நான் என் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். தோனி கூறியது எனக்கு உத்வேகமூட்டுகிறது. ஒரு முனையில் நின்று ஆடக்கூடிய பேட்டிங் எனக்கு பழக்கமானதுதான்.

என் பேட்டிங்கில் நான் கவனம் செலுத்தி வருகிறேன், 20-25 ரன்களை அடிக்கும் பேட்ஸ்மெனாக ஒருபோதும் இனி இருக்க முடியாது.இந்தப் போட்டியில் செய்தது போல் ஒருமுனையில் நின்று கடைசி வரை வெற்றிக்காக ஆடும் வீர்ராக விரும்புகிறேன். இந்த வெற்றி எனக்கு பெரிய அளவில் உற்சாகத்தை அளிக்கிறது. இவ்வளவு பெரிய இலக்கை துரத்தி வெற்றி கண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.

இவ்வாறு கூறிய ஜடேஜா, விஜய் ஹசாரே டிராபியின் 4 போட்டிகளில் விக்கெட்டுகள் எதையும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x