Published : 04 Mar 2024 07:53 AM
Last Updated : 04 Mar 2024 07:53 AM
மும்பை: ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் ஸ்ரேயஸ் ஐயர் மோசமாக விளையாடி குறைந்த ரன்களில் அவுட்டானார். இதையடுத்து அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதியில் தமிழகம் - மும்பை அணிகள் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் விளையாடி வருகின்றன. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த அரையிறுதிப் போட்டியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 146 ரன்களில் சுருண்டது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை மும்பை அணி விளையாடியது. நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்கள் பறிபோன நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். ரஞ்சி கோப்பையில் விளையாடாததால் 2023 - 24 இந்திய அணியின் மத்திய ஊதிய ஒப்பந்தபட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் ரஞ்சி போட்டியில் அவர் களமிறங்கினார்.
ஏற்கெனவே சர்வதேச போட்டிகளில் `ஷார்ட் பிட்ச் ' பந்துகளில் அவர் தடுமாறுகிறார். விரைவில் ஆட்டமிழக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் அவர் `ஷார்ட் பிட்ச்' பந்துகளில் தடுமாறினார். இந்நிலையில் தமிழக வீரர் சந்தீப்வாரியர் அவருக்கு எதிராக முதல் ஓவரிலேயே பவுன்ஸர் பந்துகளை வீசினார். இதனால் ஸ்ரேயஸ் ஐயர் நிதானமாக விளையாட ஆரம்பித்தார்.
அதற்கடுத்த ஓவரில் சந்தீப் ஓவரின் பந்துகளை விளாச ஸ்ரேயஸ் ஐயர் முயன்றார். ஆனால் சந்தீப் வாரியரின் பந்தைக் கணித்து விளையாடத் தவறிய ஸ்ரேயஸ் ஐயர் போல்டாகி 3 ரன்களில் வெளியேறினார்.
`ஷார்ட் பிட்ச்’ பந்துகளில் அவருக்குபலவீனம் இருப்பதை கண்டறிந்தே அவரை உள்ளூர் தொடரில் ஆடுமாறுகூறி இருந்தது இந்திய அணிநிர்வாகம். ஆனால் உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்து அவர் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்தார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடி பயிற்சி பெறாத ஸ்ரேயஸ் ஐயரின் பலவீனத்தை தமிழ்நாடு அணி தற்போது வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.
இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து மீண்டும் ஒரு முறை உள்ளூர் போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஸ்ரேயஸ் ஐயர்.
பிரதமருடனான சந்திப்பு: ஏற்கெனவே பிரதமருடனான சந்திப்பின்போது பிரதமருடன் கைகுலுக்காமல் சென்றதாக ஸ்ரேயஸ் ஐயர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியாவிடம், இந்திய அணி தோல்வி கண்டது. அப்போது இந்திய வீரர்களுக்கு கைகொடுத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். ஸ்ரேயஸ் ஐயர் அருகில் பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது அவரிடம் கை கொடுக்காமல் ஸ்ரேயஸ் ஐயர் வேறுபக்கம் பார்த்தபடி இருந்தார். இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அந்த அதிருப்தியின் காரணமாகத்தான் தற்போது ஸ்ரேயஸ் ஐயர், இந்திய அணியின் மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ-யால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT