Published : 04 Feb 2018 09:23 AM
Last Updated : 04 Feb 2018 09:23 AM

ஹீரோ ஐ லீக் கால்பந்து சென்னை சிட்டி - மிசோரம் ஐஸ்வால் ஆட்டம் டிரா

ஹீரோ ஐ லீக் கால்பந்துப் போட்டியில் நேற்று சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் - மிசோரம் ஐஸ்வால் அணிகள் மோதிய ஆட் டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 3-வது நிமிடத்திலேயே மிசோரம் ஐஸ்வால் அணியைச் சேர்ந்த யூகோ கோபையாஜி கோல் அடித்தார். இதையடுத்து சென்னை அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். சூசைராஜ், எட்வின் ஆகியோர் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை தவற விட்டனர். முதல் பாதி ஆட்டத்தில் மிசோரம் ஐஸ்வால் 1-0 என முன்னிலை வகித்தது.

57-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணி வீரர் கிளிட்டர்ஸுக்குப் பதிலாக மாற்று வீரராக பியூட்டின் ஆன்டனி களமிறக்கப்பட்டார். 73-வது நிமிடத்தில் எதிரணியினரின் தடுப்புகளை மீறி ஆன்டனி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது. சென்னை அணி கோல் அடித்ததும் உள்ளூர் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக் கில் டிராவில் முடிவடைந்தது. சென்னை சிட்டி அணிக்கு இது 5-வது டிராவாக அமைந்தது. இதுவரை நடைபெற்றுள்ள 13 ஆட்டங்களில் 2 வெற்றியும், 6 ஆட்டங்களில் தோல்வியையும் பதிவு செய்துள்ள சென்னை சிட்டி அணி 11 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடம் வகிக்கிறது.

எதிர் வரும் சவால்கள்

இனி வரும் நாட்களில் வலுவான அணிகளான கொல்கத்தா மோகன் பகான், ஷில்லாங் லஜோங், சர்ச்சில் பிரதர்ஸ், மினர்வா பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுடன் சென்னை சிட்டி அணி மோத உள்ளது. சிறந்த 6 அணிகள் பட்டியலில் இடம் பெற வேண்டுமெனில் சென்னை அணி மேற்கொண்டு 5 ஆட்டங்களில் வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும் இதில் 4 ஆட்டங்கள் உள்ளூர் மைதானமான கோவையில் நடைபெற உள்ளது சாதகமான அம்சமாகும்.

இதுகுறித்து சி.சி.எஃப்.சி. அணி தலைமை பயிற்சியாளர் வி.சௌந்தரராஜன் 'தி இந்து'விடம் கூறும்போது, 'இனி வரும் ஆட்டங்களில் வலுவான அணிகளை எதிர்கொள்ள உள்ளோம். எனினும், 4 ஆட்டங்கள் உள்ளூர் மைதானத்தில் நடைபெற உள்ளதால், வெற்றிக் கனியைப் பறிக்க போராடுவோம். தீவிர பயிற்சி, வீரர்களின் ஒருங்கிணைப்பு ஆகியவை வெற்றியைத் தேடித் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திஉள்ளது' என்றார்.

சென்னை சிட்டி அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 7-ம் தேதி கோவை நேரு விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு கொல்கத்தா மோகன் பகான் அணியுடன் மோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x