Published : 17 Feb 2018 12:22 AM
Last Updated : 17 Feb 2018 12:22 AM
செஞ்சூரியன் மைதானத்தின் மீதான விராட் கோலியின் காதல் மீண்டுமொரு முறை நிரூபணமானது, 35-வது ஒருநாள் சதத்தை மீண்டும் ஒரு வெற்றிகரமான விரட்டலில் விரட்டல் மன்னன் விராட் கோலி எடுக்க இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா.
82 பந்துகளில் அனாயசமான சதம் கண்ட விராட் கோலி 96 பந்துகளில் 19 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 129 நாட் அவுட், ரஹானே 50 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34 நாட் அவுட். முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி மோசமான பேட்டிங்கில் 204 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது.
இலக்கை விரட்டுவதன் மூலம் இதுகாறும் இருந்த வசதியான இடத்திலிருந்து அழுத்தங்களை எதிர்கொள்வோம் என்றார் விராட் கோலி, ஆனால் எந்தச் சவாலுக்கும் தயாராக தென் ஆப்பிரிக்கா இல்லை, ரபாடா, மில்லர், மோர்கெல் என்று என்ன தைரியத்தில் வீர்ர்களை நீக்கம் செய்தது என்பதும் புரியவில்லை. எப்போதும் கடைசி போட்டியை வெல்வது அடுத்த தொடருக்கான உத்வேகமாகும். இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதையடுத்து பெற்ற உத்வேகம்தான் ஒருநாள் தொடரில் செலுத்திய ஆதிக்கமாகும். எனவே இந்த விதத்தில்தான் கோலியின் எதிர்பார்ப்பை முறியடிக்க முடிந்துள்ளது தென் ஆப்பிரிக்காவினால், அதாவது சவாலான இலக்கை விரட்டிப் பழக வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைத்த கோலியின் எதிர்பார்ப்பை தென் ஆப்பிரிக்கா முறியடித்ததுதான் அந்த அணிக்கு ஒரே ‘வெற்றி’ யாகும்.
ஏற்கெனவே தொய்வடைந்து விட்ட பந்து வீச்சில் கோலி 35வது சதம் எடுப்பார் என்பது தெரிந்ததுதான், அதுவும் சதமெடுப்பது ஒரு வழக்கமான பிறகு இந்த வழக்கமான பந்து வீச்சில் இன்னொரு வழக்கமான, ஆனால் அனாயசமான சதமெடுப்பது ஆச்சரியமில்லை.
இந்த ஒருநாள் தொடரில் 558 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி, இருதரப்பு தொடரில் ஒரு பேட்ஸ்மென் எடுக்கும் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராகும் இது. இதில் 3 சதங்கள் அடங்கும், இந்த ஒருநாள் தொடரில் கோலியின் குறைந்த எண்ணிக்கையே 36 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சதம் கண்ட விறுவிறுப்பில் இறங்கிய ரோஹித் சர்மா கட்ஷாட்களை அபாரமாகப் பயன்படுத்தி ஆடத் தொடங்கினார் 13 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்திருந்த போது, லுங்கி இங்கிடி ஒரு பந்தை லெக் ஸ்டம்பில் எகிறச் செய்ய பந்தின் வேகம் 126 கிமீதான் என்றாலும் கொஞ்சம் கூடுதல் உயரம் எழும்பியதால் ஃபைன் லெக்கில் அது போகும் வழியில் அப்படியே பவுண்டரி அடிக்க முயன்ற ரோஹித் மட்டையில் சரியாகச் சிக்காமல் விக்கெட் கீப்பர் கிளாசனிடம் கேட்ச் ஆனது.
சரி ஒரு விக்கெட்டை ஷார்ட் பிட்ச் பந்தில் எடுத்தாகிவிட்டது பேசாமல் ஒழுங்கான லைன் லெந்தில் வீச வேண்டியதுதானே? எதற்கெடுத்தாலும் ஷார்ட் பிட்ச் பந்தை பயன்படுத்தத் தொடங்கினர். மந்தமான பிட்சில் இது தேவையற்ற சோதனை.
அதுவும் கோலிக்கு ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்கலாமா? அது அவர்களுக்கே பெருஞ்சோதனையானது, கிடைக்கோட்டு மட்டை ஷாட்களை கோலி இருபுறமும் பிரயோகிக்க 25 பந்துகளில் 38 ரன்கள் என்று தொடக்கத்திலேயே எகிறினார். ஷிகர் தவண் மறு முனையில் ஸ்லோ பிட்ச் என்பதால் டைமிங் கிடைக்காமல் தடவி 30 பந்துகளில் பாதி ரன்களையே எடுத்திருந்தார், கடைசியில் 18 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிடி பந்தை கட் ஆடினார், நேராக பாயிண்டில் ஸோண்டோவிடம் கேட்ச் ஆனது இந்தியா 80/2, ஆனால் 12.4 ஓவர்களில் 80 ரன்கள். கிட்டத்தட்ட ஓவருக்கு 7 ரன்கள் வீதத்தில் ரன்கள் வந்து கொண்டிருந்தது.
அதன் பிறகு கோலி, ரஹானே 117 பந்துகளில் 129 ரன்களை 3-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் சேர்த்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர். கோலி 82 பந்துகளில் சதமெடுத்தார், சதமெடுத்த பிறகு பொறுத்தது போதும் பொங்கி எழு என்று இம்ரான் தாஹிரை ஒரு மிட்விக்கெட் சிக்ஸும் பிறகு மேலேறி வந்து மிக அழகாக ரசிகர்களைத் தாண்டி நேராக ஒரு அற்புத சிக்சரையும் அடித்தார்.
எதிரணியினரின் ரன்களில் கிட்டத்தட்ட 70% ரன்களை கோலியே எடுத்து விட்டார். எந்த வித சவாலும் அவருக்கு அளிக்கப்படவில்லை, ஷார்ட் பிட்ச் பந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதை கோலி ரன் எடுக்கும் வாய்ப்பாக மாற்றிக் கொண்டார். இயன் சாப்பல் இருந்திருந்தால் புகழ்ந்து தள்ளியிருப்பார், காரணம், ஷார்ட் பிட்ச் பந்துகள் ரன் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு என்பதை அவர் தொடர்து வலியுறுத்துபவர், இதனால் கோலி இன்று அவருடைய வாக்கை மெய்ப்பித்தார்.
வெற்றிக்கான ஷாட்டை அவர் நேராக அடித்த போது எந்தவித உணர்ச்சியும் அவரிடத்தில் இல்லை, இறுக்கமான ஒரு முகத்துடன் டிவில்லியர்சை ஆரத்தழுவினார். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றார் விராட் கோலி.
இந்தத் தொடரை தென் ஆப்பிரிக்கா விராட் கோலி, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரிடம் இழந்தது. எனவே தென் ஆப்பிரிக்காவை ‘கோலிசாஹல்தீப்’ செய்து விட்டது இந்தியா என்று அயர்லாந்து இலக்கிய மேதை ஜேம்ஸ் ஜாய்ஸ் பாணி Portmonteau word பிரயோகம் செய்து எள்ளல்-சுருக்கமாக மதிப்பிடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT