Published : 10 Feb 2018 09:57 PM
Last Updated : 10 Feb 2018 09:57 PM
வாண்டரர்ஸில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.
ஒருகட்டத்தில் 340 ரன்களை இந்தியா குவிக்கும் என்ற நிலை இருந்தது, ஆனால் இடி, மின்னல் தாக்குதலால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டபோது விக்கெட்டுகள் சரிந்தன. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை கடைசி 10 ஓவர்களில் 59 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது.
கடைசியில் விக்கெட்டுகள் சரிவில் தோனிக்கு அதிகம் ஸ்ட்ரைக் கிடைக்காததால் ஒரு 20 பந்துகளுக்கு பவுண்டரியே வரவில்லை. எப்படியோ கடைசியில் தோனி 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களை கிறிஸ் மோரிஸின் கடைசி ஓவரில் எடுக்க 289 ரன்கள் என்ற நல்ல இலக்கை நிர்ணயித்துள்ளது,
தொடரைக் காப்பாற்ற தென் ஆப்பிரிக்கா 290 ரன்களை எடுக்க நன்றாக ஆட வேண்டியது அவசியம். குல்தீப், சாஹல் என்ற அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இன்றைய போட்டியின் முக்கிய அம்சம். தென் ஆப்பிரிக்காவுக்கும் வெற்றிக்கும் இடையே குல்தீப் யாதவ், சாஹல் உள்ளனர்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷிகர் தவணுடன் கோலி இணைந்தார். இருவரும் கிட்டத்தட்ட 6 ரன்கள் விகிதத்தில் ரன்களை எடுத்து நெருக்கடியிலிருந்து மீட்டனர்.
கோலி மிக அருமையாக நடந்து வந்து இடைவெளிகளில் பந்துகளை தூக்கி அடித்தார், ரபாடாவை சில அருமையான ஷாட்களை ஆடினார். அதே போல் லுங்கி இங்கிடியை இரண்டு அடி நகர்ந்து வந்து நேராக அடித்த சிக்ஸ் மிக அருமை. கோலிக்கு மோர்கெல் ஒரு பந்தை எகிறச் செய்ய கோலி அதனை ஆட முன் விளிம்பில் பட்டு மோர்கெலிடமே உயரம் எழும்பி கேட்சாக வந்தது, ஆனால் மோர்கெல் முயற்சி செய்தும் பந்தை எட்ட முடியவில்லை.
21 வது ஓவரில் டீப் மிட்விக்கெட்டில் பெலுக்வயோ பந்தை அடித்து 2 ரன்கள் ஓடினார் கோலி, இதன் மூலம் கூட்டணி 100 ரன்களைச் சேர்த்தது, பிறகு மோர்கெலை காலியாக இருந்த அவுட் பீல்டைக் கணக்கில் கொண்டு மிட் ஆஃப் தலைக்கு மேல் தூக்கி அடித்து விராட் கோலி அரைசதம் கடந்தார். கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் 3-வது அரைசத ஸ்கோராக இது அமைந்தது.
ஷிகர் தவண், கிறிஸ் மோரிஸை ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் ஆக்ரோஷ வழிக்கு திரும்பினார். பெலுக்வயோ பந்தை லாங் லெக் திசையில் தட்டி விட்டு 100வது ஒருநாள் போட்டியில் அரைசதம் கடந்தார் தவண். அதே ஓவரில் அரைசதத்தை கொண்டாடும் விதமாக டவுன் த பிட்ச் வந்து ஜெயசூரியா பாணி பிளிக் ஷாட்டில் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸ் அடித்தார்.
75 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆன் த அப்பில் கிறிஸ் மோரிஸ் பந்தை தூக்கி அடித்தார், ஆனால் பந்து சரியாகச் சிக்காமல் கவரில் மில்லரிடம் கேட்ச் ஆனது. கோலி 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75 ரன்களில் வெளியேறினார். பிறகு 92 ரன்களில் இருந்த தவண், ரபாடா கால்காப்புக்கு வீசிய பந்தை படு அலட்சியமாக ’விப்’ செய்து சிக்ஸ் அடித்தார். ரபாடா சற்றே அசந்து போனார். பிறகு மோரிஸின் தாழ்வான புல்டாஸை நேராக அடித்து 100வது போட்டியில் சதம் கண்டார். 100வது போட்டியில் சதம் காணும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் தவண் எட்டினார்.
200/2 என்ற நிலையில் மின்னல், இடி தாக்குதல் ஏற்பட ஆட்டம் நிறுத்தப்பட்டது, தவன் 107 ரன்களில் இருந்தார். ரஹானே 5 ரன்களில் இருந்தார். மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் தவண் 109 ரன்களில் கிறிஸ் மோரிஸ் பந்தை நேராக டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரஹானே 8 ரன்களில் லுங்கி இங்கிடி பந்தை புல் ஷாட்டில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்தார்.
தோனி களமிறங்கி மோர்கெல் வீசிய வேகம் குறைந்த, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற, எகிறு பந்தை கவர் திசையில் சிக்சருக்குத் தூக்கினார். ஷ்ரேயஸ் ஐயர் அதே ஓவரில் அருமையாக மிட் ஆனைக் கடந்து ஒரு பவுண்டரி அடித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 18 ரன்கள் எடுத்த நிலையில் லாங் ஆனில் கேட்ச் ஆனார். பாண்டியா 9 ரன்களில் தெ.ஆ. கேப்டன் மார்க்ரம் கவரில் எழும்பிப் பிடித்த திகைப்பூட்டும் கேட்சுக்கு ரபாடாவிடம் வீழ்ந்தார் புவனேஷ்வர் குமார் 5 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
தோனிக்கு நடுவில் ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் நிச்சயம் அரைசதம் எடுத்து ஸ்கோரை 300ஐத் தாண்டி கொண்டு சென்றிருப்பார், ஆனால் தோனி கடுமையாக 2 ரன்களை ஓடினார். அதுவும் ஒரு யார்க்கர் பந்தை ஒரு ஹெலிகாப்டர் அடி அடிக்க பவுண்டரியில் டிவில்லியர்ஸ் அதனை அபாரமாகத் தடுக்க 2 ரன்களை வேகமாக தோனி ஓட கிரிக்கெட் ஆட்டம் அதன் உச்சபட்ச தரநிலையில் இருந்தது. தோனி 43 பந்துகளில் 42 நாட் அவுட். இதியா 289/7.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT