Published : 29 Feb 2024 07:18 AM
Last Updated : 29 Feb 2024 07:18 AM
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை அடைந்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 12-வது இடத்தை அடைந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஜெய்ஸ்வால் தரவரிசையில் 69-வது இடத்தில் இருந்தார். இந்த தொடரில் 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதங்கள் விளாசியதன் மூலம் தரவரிசையில் படுவேகமாக முன்னேற்றம் கண்டு 15-வது இடத்தை எட்டிப்பிடித்திருந்தார்.
ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் கூட்டாக 110 ரன்கள் சேர்த்ததன் மூலம் தற்போது தரவரிசையில் 3-வது இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார் ஜெய்ஸ்வால். தரம்சாலாவில் வரும் 7-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஜெய்ஸ்வால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தினால் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகக்கூடும்.
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 39 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் 31 இடங்கள் முன்னேறி 69-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் விளாசிய இங்கிலாந்தின் ஜோ ரூட் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ராஞ்சி போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்திய அவர் முதல் இடம் வகிக்கும் ஜஸ்பிரீத் பும்ராவுடான புள்ளிகள் வித்தியாசத்தை 21 ஆக குறைத்துள்ளார். பும்ரா 867 புள்ளிகளையும், அஸ்வின் 846 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஷோயிப் பஷீர் 38 இடங்கள் முன்னேறி 80-வது இடத்தை அடைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT