Published : 28 Feb 2024 06:43 PM
Last Updated : 28 Feb 2024 06:43 PM

“ரிஷப் பந்த் திரும்பி வந்தால் பழைய பன்னீர்செல்வமாக இருக்க மாட்டார்” - கவாஸ்கர் எச்சரிக்கை

மும்பை: இந்திய வீரர் ரிஷப் பந்த் விபத்தில் இருந்து உயிர் தப்பிய பிறகு அவர் அறுவை சிகிச்சை மற்றும் மறு வாழ்வுச் சிகிச்சை, உடற்பயிற்சி, பேட்டிங் பயிற்சி என்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ரிஷப் 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே தெரிகிறது.

ஆனால், சுனில் கவாஸ்கர் கூறுவது என்னவெனில், கம்பேக் கொடுப்பத்தில் ரிஷப் அவசரம் காட்டுவது நல்லதல்ல என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 2022-ல், ரிஷப் பந்த் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பினார். இது அவரை விளையாட்டிலிருந்து நீண்ட காலம் விலக்கி வைத்தது. ஆனால் அவர் குணமடையும் கடைசி கட்டத்தில் இருக்கிறார். அவர் பயிற்சி வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் தங்கள் கேப்டனை வரவேற்க தயாராகி வரும் நிலையில் ரிஷப் பந்த் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே மீண்டும் விளையாடுவார் என்று கவாஸ்கர் கருதுகிறார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய கவாஸ்கர், மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய எதையும் அணி நிர்வாகம் செய்யக்கூடாது என்றார். “ரிஷப் பந்த் முழு உடற்தகுதி அடைந்து விட்டார் என்றால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரிடம் கேப்டன்சியைக் கொடுக்க வேண்டியதுதான். நாம் நம்பிக்கையுடன் இருப்போம். அவர் முழு உடற்தகுதி பெற்று ஆடப்போகும் முதல் சீசன் இதுதான். பின்னடைவு ஏற்படுத்தி விடும் எந்த ஒன்றையும் அவருக்காக நாம் அவசரமாகச் செய்து விட வேண்டாம்.

விக்கெட் கீப்பிங்கிலும் பேட்டிங்கிலும் முழங்கால்களின் பயன்பாடு அதிகம். ஒருவேளை விக்கெட் கீப்பிங்கில் அவர் உடனடியாக செயல்படாமல் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. நாம் வழக்கமாக பார்த்த ரிஷப் பந்த் ஆக அவர் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

நானே ரிஷப் பந்தின் பெரிய ரசிகர். அவர் விபத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அதே ஆரோக்கிய நிலைக்குத் திரும்ப வேண்டுமென்று கருதுகிறேன். அப்போதான் அவரால் முன்னைப்போல் நம்மை மகிழ்ச்சிப்படுத்த முடியும். அவருக்குக் கடினமாக இருக்கும். பழைய பேட்டிங் சரளம் இப்போது கொண்டுவர கொஞ்சம் கடினம். அதற்காக அவர் பாடுபட வேண்டியிருக்கும். எது எப்படியோ அவர் பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார் என்பதே ஒரு நல்ல செய்திதான்.

சாலை விபத்தில் பலத்த காயமடைவதற்கு முன்பு ரிஷப் பந்த் கடைசியாக வங்க தேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடினார். அவரது ஐபிஎல் சாதனைகளைப் பொறுத்தவரை, அவர் 98 ஆட்டங்களில் விளையாடி 147 ஸ்ட்ரைக் ரேட்டில் 2838 ரன்கள் எடுத்துள்ளார்.

இப்போது டெஸ்ட் போட்டிகளில் துருவ் ஜுரெல் அற்புதமாக ஆடி வருவதும் விக்கெட் கீப்பிங்கிலும் திறம்பட செயல்படுதலும் ரிஷப் பந்தின் இந்திய டெஸ்ட் அணி வருகையை கொஞ்சம் தள்ளிப்போடவே செய்யும்" என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x