Published : 27 Feb 2024 06:35 AM
Last Updated : 27 Feb 2024 06:35 AM

ராஞ்சி போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என தன்வசப்படுத்தியது. சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக வென்றுள்ள 17-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

ராஞ்சியில் நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்களும், இந்தியா 307 ரன்களும் எடுத்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 53.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸாக் கிராவ்லி 60, ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

192 ரன்கள் இலக்குடன் செய்த இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 24, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஜெய்ஸ்வால் 44 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள்எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்தில் ஆண்டர்சனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 17.3 ஓவர்களில் 84 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஷுப்மன் கில் களமிறங்கினார். தனது 17-வது அரை சதத்தை கடந்த ரோஹித் சர்மா 81 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் டாம் ஹார்ட்லி பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். இதன் பின்னர் ரஜத் பட்டிதார் (0), ரவீந்திர ஜடேஜா (4), சர்பராஸ் கான் (0) ஆகியோர் சீரான இடைவெளியில் ஷோயிப் பஷிர் பந்தில் நடையை கட்டினர். 84 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்த இந்திய அணி அதன் பின்னர் மேற்கொண்டு 36 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது.

120 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஷுப்மன் கில்லுடன் இணைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் நிதானமாக விளையாடினார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனது 7-வது அரை சதத்தை பூர்த்தி செய்த ஷுப்மன் கில் 124 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்களும் துருவ் ஜூரெல் 77 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயிப் பஷிர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக துருவ் ஜூரெல் தேர்வானார். முதல் இன்னிங்ஸில் அவர், நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டு 90 ரன்கள் விளாசியிருந்தார். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-1 என கைப்பற்றியது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7-ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் உள்ளூரில் தொடர்ச்சியாக 17 டெஸ்ட் தொடரை வென்று அசத்தி உள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திடம் தொடரை இழந்திருந்தது.

அதன்பிறகு இந்திய அணி உள்ளூரில் விளையாடிய 17 தொடர்களில் 50 போட்டிகளில் 39-ல் வென்று 17 தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x