Published : 26 Feb 2024 05:26 PM
Last Updated : 26 Feb 2024 05:26 PM

டான் பிராட்மேனுக்கு அடுத்து ஜெய்ஸ்வால்... கவாஸ்கர் சாதனை முறியடிப்பும், சில சாதனைத் துளிகளும்!

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 என்று கைப்பற்றியதன் மூலம் அதிக டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் வென்று ஆதிக்கத்தைக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நிலை நிறுத்தி வந்துள்ளது இந்திய அணி. ராஞ்சி வெற்றியைத் தொடர்ந்து சில சுவையான சாதனைத் துளிகளைப் பார்ப்போம்.

இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 971 ரன்களைக் குவித்து, இதற்கு முன்னால் சாதனையை வைத்திருந்த லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்துள்ளார். கவாஸ்கர் தன் முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்களை எடுத்து 8 டெஸ்ட் போட்டிகளில் 938 ரன்களை எடுத்திருந்ததுதான் 8 டெஸ்ட் ரன்களில் சாதனையாக இருந்தது. இப்போது ஜெய்ஸ்வால் இந்த மகுடத்தைச் சூட்டிக் கொண்டார்.

ஒட்டுமொத்தமாக டான் பிராட்மேன் தன் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 1210 ரன்களை எடுத்து முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஜெய்ஸ்வால் இப்போது சாதனையாளராக மிளிர்கிறார்.

200 அல்லது அதற்கு சற்று குறைவான இலக்கை விரட்டி வெற்றி பெற்ற வகையில் இந்தியா 33 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 30 போட்டிகளை வென்றுள்ளது. இந்தியாவில் இந்திய அணி 17 டெஸ்ட் தொடர்களை வென்று உள்நாட்டு தாதாவாக சாதனைப் படைத்துள்ளது. 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றதிலிருந்து தொடங்கிய வெற்றிச் சரமாகும் இது. இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 10 டெஸ்ட் தொடர்களை உள்நாட்டில் வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா 1994-2000, 2004-2008-ல் பத்து டெஸ்ட் தொடர்களில் உள்நாட்டில் வென்று சாதனையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

46 ரன்கள் முதல் இன்னிங்ஸில் பின் தங்கியிருந்து இரண்டாவதாக பேட் செய்த வகையில் டெஸ்ட் போட்டியை வென்ற பின்னிலையில் 7-வது அதிக பின்னிலையாகும். இரண்டாவதாக பேட் செய்து போட்டியை வென்றது அதுவும் முதல் இன்னிங்ஸில் எதிரணிக்கு முன்னிலை அளித்து வெற்றி பெறுவது 13வது முறையாகும்.

ஆட்ட நாயகன் விருது வென்ற அறிமுக விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் 23 வயது 33 நாட்களில் டெஸ்ட் ஆட்ட நாயகன் விருது வென்ற 5வது இளம் விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். 2002-ல் அஜய் ராத்ரா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வெல்லும் போது அவருக்கு வயது 20.

ரோகித் சர்மா ராஞ்சி டெஸ்ட் 2-வது இன்னிங்ஸில் எடுத்த 55 ரன்கள் 4-வது இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். 2021 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் 52 ரன்களை எடுத்த பிறகு 4-வது இன்னிங்ஸ் அரைசதமாகும் இது. மேலும் வெற்றிகரமான 4வது இன்னிங்ஸ் விரட்டலில் கேப்டனாக ரோகித் சர்மாவின் 55 ரன்கள் கங்குலியின் கேப்டன் சாதனைக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x