Published : 22 Feb 2024 04:54 PM
Last Updated : 22 Feb 2024 04:54 PM
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பை பாந்த்ரா பகுதியில் ரூ.5.4 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். கிழக்கு பாந்த்ராவில் வசதியானவர்கள் வசிக்கும் அதானியின் எக்ஸ் பிகேசியில் 1,100 சதுர அடி பிளாட் ரூ.5.4 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த ஃப்ளாட் ஜனவரி 7 அன்று பதிவு செய்யப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதே மும்பையில் ஒரு காலத்தில் டென்ட் அமைத்து வசித்து வந்தது ஜெய்ஸ்வால் குடும்பம். உத்தரப் பிரதேசம் சொந்த ஊராக இருந்தாலும் பிழைப்புக்காக மும்பை வந்து, மும்பையின் ஆசாத் மைதானத்தின் அருகே டென்ட்டில் தங்கி வாழ்க்கையை நகர்த்தி வந்தது ஜெய்ஸ்வால் குடும்பம். டென்டில் தாக்கியிருந்தாலும் தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காக கடுமையாக உழைத்தனர் ஜெய்ஸ்வாலின் பெற்றோர்.
ஜெய்ஸ்வாலும் தன் பங்குக்கு ஆசாத் மைதானத்தில் பானி பூரி விற்கும் வியாபாரிக்கு உதவியாக இருந்து குடும்பத்துக்காக வருமானம் ஈட்டினார். அந்த நிலையில் இருந்து தற்போது அதே மும்பையில் கோடிகளை குவித்து குடியிருப்பு வாங்கியிருக்கும் அவரின் உழைப்பு அசாத்தியமானது.
2020-ம் ஆண்டு நடந்த U-19 உலகக் கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ஸ்வாலுக்கு ஐபிஎல் தொடர் திருப்புமுனையாக அமைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த சில சீசன்களாக பங்கேற்றுவரும் ஜெய்ஸ்வால், ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2.4 கோடி விற்பனை ஆனார். 2023 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்தார்.
நேற்று வெளியான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார் ஜெய்ஸ்வால். ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி அதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்குள் அடியெடுத்து வைத்த 22 வயதான இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால்,
இங்கிலாந்து அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 209 ரன்களும், ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 214 ரன்களையும் விளாசியிருந்தார். இதன் மூலம்தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்களை விளாசிய 7-வது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT