Published : 21 Feb 2024 05:02 PM
Last Updated : 21 Feb 2024 05:02 PM

‘சென்னை ஐபிஎல் அணிக்கு நான் வந்தது எப்படி?’ - தோனி பகிர்ந்த ‘ரிஸ்க்’ அனுபவம்

சென்னை: 2008 ஐபிஎல் ஏலம் குறித்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அனுபவத் தகவல் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி.

2008-ல் தான் ஐபிஎல் தொடர் முதன்முதலில் துவங்கப்பட்டது. அப்போது நடந்த முதல் ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களை நேரடியாக ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று ஒரு விதி இருந்தது. அதன்படி சச்சின் டெண்டுல்கரை மும்பை அணியும், ராகுல் திராவிட்டை ராஜஸ்தான் அணியும், சவுரவ் கங்குலியை கொல்கத்தா அணியும், வீரேந்திர சேவாக்கை டெல்லி அணியும் அப்போது நேரடியாக சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தன.

இப்படி முன்கூட்டியே அணிகள் ஒப்பந்தம் செய்ய இன்னொரு காரணம், அப்போது இருந்த இன்னொரு விதி. நட்சத்திர வீரர்களை விட அதிக தொகைக்கு வேறு வீரர்களை ஏலத்தில் அணிகள் எடுத்தால், அவர்களை காட்டிலும் நட்சத்திர வீரர்களுக்கு 15 சதவீதம் அதிக ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதே அந்த இன்னொரு விதி. இந்த விதியின் காரணமாக முன்னணி வீரர்கள் ஏலத்தை விட நேரடியாக ஒப்பந்தம் செய்வதே லாபம் எனக் கருதி அதற்கு ஒப்புக் கொண்டனர்.

சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் இந்த விதியின் படி ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், தோனி மட்டும் ஏலத்துக்கு சென்றார். ஏலத்தின் மூலமாகவே சென்னை அணிக்கு ஒப்பந்தம் ஆனார். இது ஏன் என்பதை 16 வருடங்களுக்கு இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார் தோனி. அது தொடர்பாக பேசுகையில், "அப்போது என்னையும் இந்த விதியின் கீழ் வாங்க ஒரு அணி என்னை அணுகியது. இதில் நான் யோசித்து முடிவெடுக்க வேண்டியிருந்தது.

2007 டி20 உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டன் நான்தான் என்பதால் ஏலத்துக்கு சென்றால் எப்படியும் எளிதாக 1 மில்லியன் டாலர் வரை எனக்கு கிடைக்கும் என நினைத்தேன். அதனால், வந்த வாய்ப்பை நிராகரித்து ஏலத்துக்கு சென்றேன். ரிஸ்க் எனத் தெரிந்தே செய்தேன்.

நட்சத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்யாமல் இருந்த மற்ற மூன்று அணிகளில் இரண்டு அணிகள் என்னை வாங்க ஆர்வம் காட்டினால் கூட, அது என்னுடைய விலையை அதிகரிக்கும் என்று நினைத்தேன். ஏனென்றால் அப்படி நடந்தால் எனக்கு அதிக பணம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். அதன்படி, ஏலம் நடந்தபோது, சென்னை அணிக்காக நான் 1.5 மில்லியன் டாலர்களுக்கு (அப்போது அது 6 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டேன். அந்த நேரத்தில் எனது கணிப்பு உண்மையானது" என வெளிப்படுத்தினார் தோனி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x