Published : 20 Feb 2024 05:44 PM
Last Updated : 20 Feb 2024 05:44 PM
ராஜ்கோட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 அதிரடி இரட்டைச் சதங்களை இங்கிலாந்துக்கு எதிராக விளாசித் தள்ளியது, குறிப்பாக அவர் ஆடிய அதிரடி முறை பல பாராட்டுகளை ஈர்த்தாலும் சில பல சர்ச்சைகளையும் முன்னாள், இன்னாள் வீரர்களுக்கு இடையே உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட், ஏதோ ஜெய்ஸ்வால் இங்கிலாந்திடமிருந்து கற்றுக் கொண்டதாகக் கூறப்போக நாசர் ஹுசைன் அவருக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
டக்கெட் கூறியது இதுதான்: “எதிரணியிலிருந்து வீரர்கள் இப்படி ஆக்ரோஷமாக ஆடுவதைப் பார்க்கும் போது நாம் கொஞ்சம் அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம் என்று உணர்வு ஏற்படுகிறது. அதாவது மற்றவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் விதத்திற்கும் நாம் ஆடும் விதத்திற்குமான வித்தியாசத்திற்கான பெருமை நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது” என்று விசித்திரமாக ஒரு கருத்தை உதிர்த்துள்ளார்.
ஆனால் ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளரும் முன்னாள் இங்கிலாந்து கேப்டனுமான நாசர் ஹுசைனுக்கு பென் டக்கெட்டின் தற்பெருமை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் போட்காஸ்ட் ஒலிபரப்பில் பென் டக்கெட்டுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்
“ஜெய்ஸ்வால் ஒன்றும் உங்களிடமிருந்து ஆக்ரோஷமாக ஆடக் கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பே அப்படியானதுதான். அவர் வளர்ச்சியின் பாதையில் எதிர்கொண்ட கடினப்பாடுகளினால் வளர்ந்த ஆக்ரோஷம் ஆகும் அது. அவரிடமிருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அது இதைத்தான். கொஞ்சம் சுயபரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையெனில் இந்த ‘பாஸ்பால்’ ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன்.
சில சமயங்களில் இந்த பாஸ்பால் ஆதிக்கத்தை அப்படித்தான் வர்ணிக்கின்றனர். இப்படி ஆடிவிட்டால் விமர்சனங்களை வெளியிலிருந்தும் ஏன் உள்ளிருந்துமே செய்ய முடியாது.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஆம்! அடிக்கப் போனார் அவுட் ஆனார். அதில் தவறில்லையே என்று உள்ளிருந்தும் குரல் வரும் வெளியிலிருந்தும் ஆதரவுக்குரல்தான் வரும், பாஸ்பால் தேவையா என்ற கேள்வி எழாது. மேலும் இந்திய அணியில் ஏற்கெனவே சேவாக், சச்சின், கங்குலி போன்றோர் டெஸ்ட் போட்டியையே இந்த வேகத்தில் தான் ஆடி வந்தனர். அதனால் சேவாக்குக்குப் பிறகு இப்படி இந்திய அணியில் யாராவது ஒருவர் ஆடுவது தற்போது வழக்கம். எனவே இது இங்கிலாந்து பாஸ்பால் தாக்கம் என்பதெல்லாம் அவர்களின் முதிர்ச்சியற்ற தன்மையையும் கிரிக்கெட் வரலாற்று அறியாமையையும் காட்டுகிறது.
நாசர் ஹுசைன் மட்டுமல்ல, இந்திய அணியை எப்போதும் மட்டம்தட்டும் மைக்கேல் வான் கூட பென் டக்கெட்டை கடும் விமர்சனம் செய்துள்ளார்.
"இங்கிலாந்து அணியினர் பேசுவதைக் கேளுங்கள். இதை விட தவறு வேறு ஒன்றும் இருக்க முடியாது. வைசாகில் 600 ரன்களை விரட்டுவோம் என்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்த முறை பென் டக்கெட் இன்னும் கொஞ்சம் இலக்கு கூடுதலாக இருந்தால் நல்லது என்று பேசினார். ஆனால் தோற்றது கேவலமாக. அதுவும் 434 ரன்கள் வித்தியாசத்தில்.
ஜெய்ஸ்வால் ஆடிய அதிரடி ஆட்டத்திற்கான பெருமையில் தன் அணிக்கும் பங்கு கேட்கிறார் பென் டக்கெட். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முன்னே பின்னே யாரும் அதிரடி ஷாட்களை ஆடியிருக்காதது போல் பேசுகிறார் டக்கெட்" என்றார் மைக்கேல் வான்.
இங்கிலாந்து கிரிக்கெட் கெட்டுப்போவது அதன் மீடியாவினாலும் ஓரிரு வீரர்களின் அதீத வாயாலும் தான் என்பதற்கு ராஜ்கோட் டெஸ்ட் உதாரணமாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment