Last Updated : 13 Feb, 2018 08:24 PM

 

Published : 13 Feb 2018 08:24 PM
Last Updated : 13 Feb 2018 08:24 PM

டி20 கிரிக்கெட்: வில்லியம்சன் அதிரடியில் நியூசிலாந்து வெற்றி: இங்கிலாந்து மீண்டும் தோல்வி

 

வெலிங்டன் நகரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் கேன் வில்லியம்சன் 46 பந்துகளுக்கு 72 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது.

வெலிங்டனில்  4-வது டி20 ஆட்டம் பகலிரவு போட்டியாக நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் முன்ரோ 11 ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தார். ஆனால், 2-வது விக்கெட்டுக்கு கப்திலுடன் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கப்தில் 40 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரின் கூட்டணி 82 ரன்கள் சேர்த்து பிரிந்தது.

அடுத்து வந்த கிராண்ட்ஹோம்(0), சாப்மன்(20) நிலைத்து ஆடவில்லை.

விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய வில்லியம்சன் , இந்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துகளை தும்சம் செய்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் நிலைக்காத வில்லியம்சன் 72 ரன்களில் ஆட்டமிழந்தார் . இவரின் கணக்கில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும். டெய்லர் ஒருரன்னிலும் சீபர் 14 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ரஷீத், மார்க் உட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், மலான் மட்டுமே சிறப்பான பேட் செய்தனர். 24 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார் ஹேல்ஸ். இதில் 6 பவுண்டரிகள்,3 சிக்சர்கள் அடங்கும். மலான் 40 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்(3 சிக்சர்கள், 6 பவுண்டரிகள்) மற்ற முக்கிய வீரர்களான ஜோஸ்பட்லர்(2), ராய்(8), பில்லிங்ஸ்(12) ஆகியோர் சொற்ப ரன்களில்ஆட்டமிழந்தனர்.

158 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 14 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து தரப்பில் இயான் சோதி, டிரன்ட் போல்ட், சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x